Nov 29, 2018 01:41 AM

விஷால் நடத்திய பஞ்சாயத்து! - அடங்கிப் போன அதர்வா

விஷால் நடத்திய பஞ்சாயத்து! - அடங்கிப் போன அதர்வா

எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் படம் ‘மின்னல் வீரன்’. ’மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் இந்தப்படத்தில் அதர்வா கதாநாயகனாக ஒப்பந்தமாகி, படத்தின் வேலைகள் ஜரூராக நடைபெற்று வந்தன. 

 

இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன் அதர்வா தயாரித்து நடித்த ‘செம போத ஆகாத’ படம் வெளியானது. இந்தப்படம் ஒருகட்டத்தில் ரிலீஸுக்கு தயாராவதில் பொருளாதார ரீதியாக சிரமத்தை சந்தித்தபோது, இந்தப்படத்தை நல்லபடியாக வெளியிடுவதற்கு தனது எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் உதவிக்கரம் நீட்டினார் தயாரிப்பாளர் மதியழகன். 

 

ஆனால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியன்று தன் பக்கம் உள்ள சில பிரச்சனைகளை அதர்வா சரிசெய்து படத்தை மதியழகனுக்கு ஒப்படைப்பதற்குள், முதல் இரண்டு காட்சிகள் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. அதனால் அந்தப்படத்தை விநியோகஸ்தர்களுக்கு இந்தப்படத்தை டிஸ்ட்ரிபியூஷன் முறையில் கொடுக்க வேண்டியதாகி விட்டது. அப்படி வெளியிட்ட வகையில் மதியழகனுக்கு சுமார் 5 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது.

 

இந்த சமயத்தில் அதர்வா தன்னால் ஏற்பட்ட ரூ 5 கோடி இழப்பை சரிகட்டும் விதமாக சம்பளம் வாங்காமல் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் ஒரு படம் நடித்து தருவதாக கூறினார். ஆனால் தயாரிப்பாளர் மதியழகனோ, பட்ஜெட்டை பார்க்காமல் நல்ல தரமான படங்களையே கொடுக்க விரும்புவர் என்பதால், தான் ஏற்கனவே திட்டமிட்டு, படப்பிடிப்பிற்கு தயார் நிலையில் இருந்த ’மின்னல் வீரன்’ படத்தில் தான் அதர்வா நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் இந்த பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

 

இருவரையும் அழைத்து சுமார் நான்கரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய விஷால், தயாரிப்பாளர் தரப்பில் உள்ள நியாயங்களை முழுதுமாக கேட்டுவிட்டு, ‘மின்னல் வீரன்’ படத்திலேயே அதர்வாவை நடித்துக் கொடுக்கும்படியும் அது அவரது கேரியருக்கு எவ்வளவு பக்கபலமாக இருக்கும் என்பதையும் எடுத்துக்கூறி அறிவுறுத்தினார். 

 

Minnal Veeran

 

தயாரிப்பாளரின் உறுதியையும் விஷால் பேச்சில் இருந்த நியாயத்தையும் உணர்ந்த அதர்வா, இறுதியில் மின்னல் வீரன் படத்திலேயே தான் நடிப்பதாக முழுமனதுடன் ஒப்புக்கொண்டார். இந்தப்படத்தை விரைவாக முடித்து ஆறு மாதங்களுக்குள் படத்தை வெளியிட உதவுவதாகவும் அவர் விஷால் முன்பாக வாக்குறுதி அளித்துள்ளார். அதை தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பை உடனே ஆரம்பியுங்கள் என்றும் அதற்கு தயாரிப்பாளர் சங்கம் பக்கபலமாக நிற்கும் என்றும் விஷால் ஊக்கம் கொடுத்துள்ளார்.  

 

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பார்வதி நாயர், படம் குறித்து கூறுகையில், “சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் நடித்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது. இப்போது அதர்வாவுடன் ’மின்னல் வீரன்’. நிறைய கதைகள் கேட்டு களைத்துப் போனபோது இதுதான் நமக்கு வேணும்னு சொல்ற மாதிரி ஒரு அருமையான கதை கிடைக்குமே, அதுதான் இது.” என்றார்.

 

Parvathi Nair

 

இதையடுத்து இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். தீபக் மேனன் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.