Sep 27, 2018 07:53 AM

பிரபல பாலிவுட் நடிகர் மீது பாலியல் புகார் கூறிய விஷாலின் நாயகி!

பிரபல பாலிவுட் நடிகர் மீது பாலியல் புகார் கூறிய விஷாலின் நாயகி!

பாலிவுட்டின் பிரபல நடிகராக உள்ள நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

 

விஷாலின் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தனுஸ்ரீ தத்தா, தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா, பாலியல் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இது குறித்து தனுஸ்ரீ தத்தா, “கடந்த 2008-ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, நானா படேகர் தகாத இடங்களில் கை வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

 

ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த நானா படேகரை நான் கண்டித்த போது, தனக்கு பிடித்ததை நான் செய்வேன் என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்று சத்தமாக கூறினார். நானா படேகரின் இந்த செயலுக்கு படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் ஆகிய அனைவரும் ஆதரவாக செயல்பட்டனர்.

 

இது குறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆதரவாளர்களின் மிரட்டலுக்கு ஆளானேன். என்னுடைய குடும்பத்தாரோடு வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது  அவரது ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு உள்ளானேன்.

 

ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் போன்ற பெரிய நடிகர்கள் இவ்வாறான நடிகருடன் நடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அப்போது நான் புதுமுக நடிகை என்பதால் எனக்கு எதிரான செய்திகள் ஊடகங்களில் பரப்பப்பட்டன. நானா படேகரைப் போன்ற ஆட்கள் பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது. என்னைப் போல தற்போது பல புதுமுகங்களும் இது போன்ற வலிகளை சுமந்து கொண்டு தான் இருக்கின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Nana Patekar

 

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தில் வில்லனாக நடித்த நானா படேகார், மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.