இந்திரா யார் ? - பத்திரிகையாளர்களையே வியக்க வைத்த திருப்பங்கள்

தமிழ் சினிமாவில் வாரத்திற்கு சுமார் 5-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானலும், அதில் மக்கள் மனதை கவரும் படங்கள் என்னவோ ஒன்றோ இரண்டோ தான். அப்படிப்பட்ட படங்களின் வருகைக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு செம சஸ்பென்ஸ் திரில்லர் விருந்து படைக்க இருக்கும் படம் தான் ‘இந்திரா’.
வசந்த் ரவி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இயக்கியிருக்கிறார். ஜெ.எஸ்.எம் மூவி புரொடக்ஷன் மற்றும் எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் ஜாஃபர் சாதிக் மற்றும் இர்பாஃன் மாலிக் தயாரித்துள்ளனர். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அஜ்மல் தஷீன் இசையமைத்திருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் சிறப்பு பத்திரிகையாளர்கள் காட்சி இன்று திரையிடப்பட்டது. பொதுவாக படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு படம் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்படுகிறது என்றாலே அந்த படத்தில் ஏதோ சிறப்பு விசயங்கள் நிறைந்திருக்கிறது என்பதை பத்திரிகையாளர்கள் யூகித்து விடுவார்கள். வசந்த் ரவியின் முந்தைய படமான ‘அஸ்வின்ஸ்’ படமும் இப்படி தான் திரையிடப்பட்டது. பத்திரிகையாளர்கள் யூகித்தது போல் அந்த படம் மேக்கிங் மற்றும் விஷுவல், கதை சொல்லல் ஆகியவற்றில் வித்தியாசத்தை காட்டி வியக்க வைத்தது. அதை தொடர்ந்து படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதன்படி, ‘இந்திரா’ திரைப்படமும் இன்று வெளியாவதற்கு முன்பாக திரையிடப்பட்டதால் பத்திரிகையாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் படம் பார்த்ததோடு, பலவிதமான யூகங்களுடனும் பார்த்தார்கள். ஆனால், படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர், இந்திரா யார் ? என்ற கேள்வியில் தொடங்கி அதன் பிறகு நிகழும் அத்தனை அதிர்ச்சிகரமான சம்பவங்களையும் பார்வையாளர்களின் யூகங்களை கடந்து காட்சிப்படுத்தி வியக்க வைத்துவிட்டார்.
இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும், என்று பத்திரிகையாளர்கள் அனைவரும் பாராட்டியதோடு, படத்தில் இடம் பெற்றிருக்கும் திருப்பங்களை மறைத்து விமர்சனம் எழுதுவதே மிகப்பெரிய சவாலாக இருக்கும், என்றும் பேசியது படத்திற்கான மிகப்பெரிய அங்கீகாரம்.
ஒரு படம் வெளியாவதற்கு முன்பாக இத்தகைய பாராட்டு பெறுவது என்பது மிகவும் அரிதானது, அத்தகைய அரிதான சம்பவத்தை நிகழ்த்தியிருக்கும் ‘இந்திரா’ படக்குழு படம் வெளியான பிறகும், தங்களது படத்தின் ஆச்சரியங்களை தொடர்ந்து மக்கள் அறியும்படி செய்தால், படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.