Jan 05, 2021 02:23 PM

‘யாரடி நீ மோஹினி’ புகழ் ஸ்ரீ ஹீரோவாக அறிமுகமாகும் ‘பேராசை’

‘யாரடி நீ மோஹினி’ புகழ் ஸ்ரீ ஹீரோவாக அறிமுகமாகும் ‘பேராசை’

மக்களின் பேவரைட் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றான ‘யாரடி நீ மோஹினி’ தொடர் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ஸ்ரீ, பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததோடு, பல திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் பல வருட போராட்டங்களுக்குப் பிறகு சின்னத்திரை உலகில் தனக்கான தனி இடத்தை பிடித்திருப்பவர் தற்போது ‘பேராசை’ என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

 

சினிமாவுக்காக பல வருடங்கள் போராடி வெற்றி பெற்ற ஸ்ரீ, நினைத்திருந்தால் ரொம்ப எளிதாக சினிமாவுக்குள் ஹீரோவாக நுழைந்திருக்கலாம். காரணம், அவருடைய பின்னணி அப்படிப்பட்டது. ஆம், 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் சங்கர் கணேஷின் மகன் மற்றும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் ஜி.எல்.வேலுமணியின் பேரன் என்ற அடையாளம் இருந்தும், அவற்றை எங்கேயும் காட்டிக்கொள்ளாமல் சினிமாவில் பயணித்து வருகிறார்.

 

தற்போது ஸ்ரீ ஹீரோவாக அறிமுகமாகும் ‘பேராசை’ திரைப்படம் மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லும் சமூகத்திற்கான படமாகவும், அதே சமயம், அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையிலான கமர்ஷியல் திரைப்படமாகவும் உருவாகிறது.

 

ஈசன் மூவிஸ் சார்பில் கேசவன், சரவணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘பேராசை’ படத்தில் ஸ்ரீ-க்கு ஜோடியாக அறிமுக நாயகி தீஷிகா நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கேசவன் இயக்குகிறார். சங்கர் கணேஷிடம் பல படங்களுக்கு இசை உதவியாளராக பணியாற்றிய வி.ஆர்.ராஜேஷ் என்கிற சுதர்சன் இப்படத்திற்கு இசையமைக்க, ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். குன்றத்தூர் ஹார்ஸ் பாபு சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ராதிகா நடனம் அமைக்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 4 ஆம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கலந்துக் கொண்டு, கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

 

Peraasai

 

நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், “என் மகன் ஸ்ரீ ஹீரோவாக அறிமுகமாகிறார். இதுவரை சினிமாவில் அவருக்கு நான் எங்கேயும் சிபாரிசு செய்ததில்லை. அவரே தனது சொந்த முயற்சியால் இந்த நிலைக்கு வந்துள்ளார். பல ஆண்டுகள் சினிமாவுக்காக போராடி வருகிறார். தொலைக்காட்சி தொடர்களில் சிறு சிறு வேடங்களி நடிக்க தொடங்கியவர், இன்று ‘யாரடி நீ மோஹினி’ தொடர் மூலம் உலக தமிழகர்களின் உள்ளத்தில் நுழைந்திருக்கிறார். நான் எங்கு சென்றாலும், ஸ்ரீ-யின் அப்பா இவர், என்று சொல்கிறார்கள். அதை கேட்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது. இந்த படத்தின் மூலம் அவர் சினிமாவிலும் பெரிய பெயர் எடுக்க வேண்டும். ‘பேராசை’ படக்குழுவினர் அனைவரும் பெரிய வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

ஹீரோ ஸ்ரீ பேசுகையில், “நான் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம். சந்தோஷமாக இருக்கிறது. இந்த நாளுக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன். சினிமாவில் என் தந்தையும், தாத்தாவும் பெரிய ஜாம்பவான்களாக இருந்தாலும், அவர்களுடைய பெயரை எங்கேயும் சொன்னதில்லை. எனது சொந்த முயற்சியில் தான் ஒவ்வொரு வாய்ப்பையும் பெற்று வந்தேன். 15 வயதில் என் சினிமா பயணத்தை தொடங்கினேன். ஜூனியர் நடிகராக 50 ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறேன். வசதியான குடும்பத்தில் பிறந்தாலும், சினிமாவுக்காக நிறைய கஷ்ட்டங்களை அனுபவித்திருக்கிறேன். ஆனால், நிச்சயம் சினிமாவில் சாதிப்பேன்.” என்றார்.

 

இயக்குநர் கேசவன் பேசுகையில், “இன்று மது பழக்கம் அனைவரிடமும் இருக்கிறது. சுமார் 99 சதவீதம் மக்கள் மது குடிப்பவர்களாக இருக்கிறார்கள். அதனால், அவர்களின் குடிக்க வேண்டாம் என்று சொல்ல முடியாது. ஆனால், அதை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும், என்று சொல்கிறோம். அளவற்ற போதையில் ஏற்படும் விளைவுகளை, கமர்ஷியலாக சொல்லியிருக்கிறோம். காமெடி, காதல், குடும்ப செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்து மக்களுக்கான பொழுதுபோக்கு படமாக ‘பேராசை’ இருக்கும்.” என்றார்.

 

இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ள ஸ்ரீ, ‘துஷ்ட்டன்’ என்ற மற்றொரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.