Jan 23, 2021 04:40 AM

பா.இரஞ்சித் படத்தில் ஹீரோவாக களம் இறங்கும் யோகி பாபு!

பா.இரஞ்சித் படத்தில் ஹீரோவாக களம் இறங்கும் யோகி பாபு!

முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு, சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்த சில படங்கள் வெற்றி பெற்றதால், அவருக்கு தொடர்ந்து ஹீரோ வாய்ப்பு வந்தாலும், “நான் எப்போதும் காமெடி நடிகர் தான்” என்று அடிக்கடி சொல்லி வருகிறார்.

 

இந்த நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித், தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் படத்தில் யோகி பாபு ஹீரோவாக களம் இறங்குகிறார். ‘பொம்மை நாயகி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து யாழி பிலிம்ஸ் சார்பில் வேலவன், லெமுவேல் ஆகியோரும் தயாரிக்கிறார்கள்.

 

அறிமுக இயக்குநர் ஷான் இயக்கும் இப்படத்தில் சுபத்ரா, ஜி.எம்.குமார், ஹரி, விஜய் டிவி ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்ய, ஜெயரகு கலையை நிர்மாணிக்கிறார். கபிலன், அறிவு ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. இயக்குநர் பா.இரஞ்சித் கிளாப் போர்ட் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.