Sep 02, 2017 05:08 AM

மாணவி அனிதா மறைவுக்கு ரஜினி, கமல் இரங்கல்!

மாணவி அனிதா மறைவுக்கு ரஜினி, கமல் இரங்கல்!

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

முதன் முதலாக அனிதா மரணத்திற்கு இரங்கல் செய்தி வெளியிட்ட கமல்ஹாசன், “மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக வாதாட வேண்டியவர்கள் எல்லாம், பேரம் பேசி கொண்டிருக்கிறார்கள். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். சாதி, கட்சி பாகுபாடின்றி நியாயத்திற்காக அனைவரும் போராட வேண்டும். நீட் விவகாரத்தில் இன்று வருகிறது நல்ல செய்தி என கூறியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள். கனவுடன் வாழ்ந்த பெண்ணை, மண்ணோடு மண்ணாக்கி விட்டோம். அனிதா எனக்கும் மகள் தான். ஒரு நல்ல டாக்டரை இழந்து விட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.

 

அவரை தொடர்ந்து இரங்கல் செய்தி வெளியிட்ட ரஜினிகாந்த், “அனிதாவிற்கு நிகழ்ந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. என் மனம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது. இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு அனிதா பட்ட வலியையும், வேதனையும் என்னால் உணர முடிகிறது. அவருடைய குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ், விவேக், ஆர்.ஜே.பாலாஜி, சூரி, இயக்குநர்கள் சேரன், பா.ரஞ்சித், பாண்டியராஜ், தங்கர் பச்சான், சீனு ராமசாமி, ராம், பாடலாசிரியர்கள் தாமரை, விவேக் ஆகியோரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

 

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார், நேரில் சென்று மாணவி அனிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.