Feb 12, 2026 05:21 PM

10 வது ஆண்டில் ஒன்று கூடிய ‘விசாரணை’ படக்குழு!

10 வது ஆண்டில் ஒன்று கூடிய ‘விசாரணை’ படக்குழு!

தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள் வெறும் திரைப்படங்களாக இல்லாமல், ஒரு காலகட்டத்தின் குரலாகவும், சமூக சாட்சியாகவும் மாறிவிடும். அந்த வகையில், 2016ஆம் ஆண்டு வெளியான விசாரணை திரைப்படம் இன்று வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 

 

இந்த சிறப்பான தருணத்தை நினைவுகூறும் விதமாக, அப்படத்தின் படக்குழு இயக்குனர் பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் ஒன்று கூடி கலந்துரையாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 

 

இந்நிகழ்வினில் இயக்குநர் வெற்றிமாறன், எழுத்தாளர் சந்திரகுமார், நடிகர் வே.இர.தினேசு, இயக்குனர் & நடிகர் சமுத்திரக்கனி,  கருணாஸ், இயக்குனர் சரவண சுப்பையா, மூணார் ரமேஷ், திலீப் சுப்பராயன், இயக்குநர் தமிழ், ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர் .

 

வுண்டர்பார் பிலிம் (Wunderbar Films) மற்றும் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி  (Grass Root Film Company) நிறுவனங்களின் தயாரிப்பில் எழுத்தாளர் எம்.சந்திரகுமாரின் ‘லாக்கப்’ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ’விசாரணை’ திரைப்படம்,  போலீஸ் விசாரணை என்ற பெயரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், அதிகாரத்தின் கொடூர முகம், அடித்தட்டு மக்களின் வலி, அனைத்தையும் மிக நேர்மையாகவும், தைரியமாகவும் திரையில் பதிவு செய்தது. எந்த பெரிய வணிக சமரசங்களும் இல்லாமல், உண்மையை அப்படியே சொல்லும் சினிமாவாக இப்படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுகளை பெற்றது.

 

வெற்றிமாறனின் இயக்கத்தில், இயல்பான நடிப்பு, ஆவணப்படத் தன்மையிலான  காட்சியமைப்பு, மனதை உலுக்கும் கதை சொல்லல் ஆகியவை ‘விசாரணை’யை ஒரு சாதாரண திரைப்படத்தையும் தாண்டிய, ஒரு சமூக ஆவணமாக மாற்றின. தேசிய, சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் பெற்ற அங்கீகாரம், தமிழ் சினிமாவின் தரத்தை உலக அரங்கில் உயர்த்திய முக்கிய தருணங்களில் ஒன்றாக அமைந்தது.

 

‘விசாரணை’ போன்று துணிச்சலான, சமூக பொறுப்புள்ள படங்கள் தொடர்ந்து உருவாக வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அந்த வகையில், 10 ஆண்டுகள் கடந்தும் ‘விசாரணை’ இன்னும் உயிருடன் பேசிக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படமாகவே திகழ்கிறது.