Feb 01, 2026 06:21 PM

’ராட்ட’ திரைப்பட விமர்சனம்

3da46cbaabe43a233d910c0dc32124a1.jpg

Casting : Sakthivel Nagappan, Helan, Siddha Tharshan, Chaplin Balu, Chandran, Krishnan, Muthuraja, Bombay Subramani, Kalpana, Jayasri, Vasanthi, Rathna, Chellamma

Directed By : Sakthivel Nagappan

Music By : Mani Krishnan

Produced By : Sakthivel Nagappan

 

கைத்தறி நெசவாளரான நாயகன் சக்திவேல் நாகப்பன், தறி ஓட்டுவதில் கட்டிக்காரராக இருப்பதால், தான் பணியாற்றும் தறி பட்டறையில் அதிகமாக கூலி வாங்கும் பலே தொழிலாளி என்ற பெருமையோடு வலம் வருகிறார்.  அதே பட்டறையில் புதிதாக வேலைக்கு சேரும் பட்டதாரியான நாயகி ஹெலனுக்கும், சக்திவேல் நாகப்பனுக்கும் இடையே காதல் மலர்கிறது. இதற்கிடையே பணம், சொத்து இருந்தும் தனக்கு துணை இல்லாத சோகத்தில் இருக்கும் தறி பட்டறையின் முதலாளி சித்தா தர்ஷன், ஹெலனை திருமணம் செய்ய விரும்பி, தன் விருப்பத்தை அவரிடம் தெரிவிக்கிறார்.

 

முதலாளியின் மனதில் இப்படி ஒரு ஆசை ஏற்பட்டதால் பதற்றம் அடையும் ஹெலன், அவசரம் அவசரமாக சக்திவேல் நாகப்பனை திருமணம் செய்கிறார். இவர்களது இந்த திடீர் திருமணத்தால் இவர்களது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தாலும், இவர்கள் தம்பதியானதை வரவேற்று வாழ்த்து தெரிவிக்கிறார்கள். மகிழ்ச்சியோடு இல்லற வாழ்க்கையை தொடங்கும் இவர்களது வாழ்க்கையில் திடீர் பேரிடியாக, சக்திவேல் நாகப்பன் தனது தொழிலில் தடுமாற தொடங்குகிறார். அவரை பாராட்டியவர்கள் அவரது வேலைபாட்டில் குறை சொல்ல, அவரது தடுமாற்றம் அதிகரித்து, மன உளைச்சலுக்கு ஆளாகி, தன் மீதான நம்பிக்கையை இழந்து விரக்தியின் உச்சத்துக்கு சென்று விடுகிறார். 

 

திருமணத்திற்குப் பிறகு தோல்வியை தழுவும் தன் கணவனின் நிலையை கண்டு கலங்காமல், அவரது நிலையை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபடும் நாயகி ஹெலனின் நடவடிக்கையும், அதனால்  நாயகனின் நிலை மாறியதா ? இல்லையா ? , என்பதையும் படம் பார்ப்பவர்களுக்கு ஊக்களிக்கும் விதமாக சொல்வதே ‘ராட்ட’ படத்தின் கதை.

 

கதை எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் சக்திவேல் நாகப்பன், கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். முதல் படத்தில் இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என்று பன்முகத்தோடு பணியாற்றிய பலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் சக்திவேல் நாகப்பனுக்கும் நிச்சயம இடம் கிடைக்கும்.

 

கதையின் நாயகனாக தறி பட்டறையில் பணியாற்றும் கைத்தறி நெசவாளர் கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டிருக்கும் சக்திவேல் நாகப்பன், தறி ஓட்டுவது, நாயகியிடம் காதல் வயப்படுவது மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி அழுது புலம்புவது, என்று அனைத்து ஏரியாவிலும் அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ஹெலன், பக்கத்து வீட்டு பெண் போல் எளிமையாக பயணித்து பார்வையாளர்களின் கவனம் ஈர்ப்பதோடு, கணவனை தேற்றி அவரது நிலையை மாற்றும் முயற்சியில் தன் நடிப்பால் முத்திரை பதித்திருக்கிறார்.

 

தறி பட்டறையின் முதாளியாக நடித்திருக்கும் சித்தா தர்ஷன், ‘சித்தா’ படத்திற்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். சொத்து இருந்தும், சுகம் இல்லாத சோகத்தில் வலம் வரும் அவரது வேடம், பார்வையாளர்கள் மனதில் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தினாலும், ”நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்” என்ற வாக்கியத்துக்கு ஏற்ப அமையும் அவரது வாழ்க்கை ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது.

 

சாப்லின் பாலு தறி பட்டறையில் பணியாற்றும் ஊழியராக இருந்தாலும், முதலாளியை அவன் இவன் என்று ஒருமையில் பேசுவது ஏன்? என்று தெரியவில்லை. அதே சமயம், சம்மந்தம் இல்லாத இடத்தில் தலை காட்டும் அவரது கதாபாத்திரம் தேவையில்லாத ஒன்றாகவே தெரிகிறது.

 

சந்திரன் கிருஷ்ணன், முத்துராஜா, பம்பாய் சுப்ரமணி, கல்பனா, வசந்தி, ஜெயஸ்ரீ, ரத்னா, செல்லம்மா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கு புதிதாக இருந்தாலும், அவர்களது எதார்த்தமான மற்றும் தடுமாற்றமான நடிப்பு உண்மைக்கு நெருக்கமாக அமைந்து திரைக்கதைக்கு உயிரூட்டியிருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் வெற்றியின் பணி மிக எளிமையாக இருப்பதோடு, காட்சிளை கண்ணியத்தோடு படமாக்க வேண்டும் என்ற மெனக்கெடல் தெரிகிறது.  முதல் இரவு பாடல் காட்சியை கூட எந்தவித விரசம் இல்லாமல் படமாக்கி தன் நேர்மையை பறைசாற்றி இருக்கிறார். 

 

இசையமைப்பாளர் மணி கிருஷ்ணனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக முதல் இரவு பாடல் டி.இமானின் பாடல்களை நினைவுப்படுத்துகிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

எளிமையான கதையாக இருந்தாலும், அதன் மூலம் இயக்குநர் சொல்லும் மெசஜை மிக வலிமை மிக்கதாக பார்வையாளர்கள் உணரக்கூடிய விதத்தில் காட்சிகளை தொகுத்திருக்கிறார் லோகேஷ்.

 

தறி பட்டறை மற்றும் கைத்தறி நெசவாளர் பற்றிய கதையை, நிஜமான கைத்தறி பட்டறையில் படமாக்கி, அத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் படத்துடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ளும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படத்திற்கு நிர்வாகத் தயாரிப்பாளர் டாக்டர். மூதுரை பொய்யாமொழியின் பணி மிகப்பெரிய துணையாக பயணித்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.

 

முதல் படத்திலேயே எழுத்து, இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என பன்முகத்திறன் கொண்டவராக அறிமுகமாகியிருக்கும் சக்திவேல் நாகப்பன், வியாபார நோக்கத்திற்காக அல்லாமல் மக்களுக்கு நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என்ற அவரது நோக்கம் படம் முழுவதும் பிரதிபலிக்கிறது. 

 

படத்தில் காதல், காமெடி, காமம், கோபம், ஏமாற்றம், ஏக்கம் என அனைத்து உணர்வுகளும் இருக்கிறது, ஆனால் அனைத்தையும் நெருடல் இல்லாமல் நேர்மை வழியில் சொல்லி, மக்களை படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் சக்திவேல் நாகப்பன்.

 

ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வை தாண்டி, ஒரு நெசவாளரின் வாழ்க்கையை படித்தது போன்ற உணர்வை கொடுத்திருக்கும் சக்திவேல் நாகப்பன், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என தான் ஏற்றுக்கொண்ட அனைத்து துறைகளிலும் நேர்மையாக பயணித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘ராட்ட’ நேர்மையான திரைப்படம்.

 

ரேட்டிங் 3/5