Feb 06, 2026 10:37 AM

‘ரெட் லேபில்’ திரைப்பட விமர்சனம்

3e121a0152b1afe3a51bb710ccf3c2ad.jpg

Casting : Lenin, Azmin, R.V. Udhayakumar, Munishkanth, Anu Mohan

Directed By : K.R. Vinoth

Music By : Kailas Menon

Produced By : Revgen Film Factory - Lenin

 

கல்லூரி காலத்தில் அடிதடி, போலீஸ் வழக்கு என்று இருந்த நாயகன் லெனின், கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு அனைத்தையும் விட்டுவிட்டு, தொழில், காதல் என்று அமைதியாக வாழ்ந்து வரும் நிலையில், மீண்டும் தனது கல்லூரியில் நடைபெறும் மாணவர்கள் தலைவர் தேர்தலில் பயணிக்க கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். அடிதடியை தவிர்த்துவிட்டு அமைதியான முறையில் பயணிக்க வேண்டும் என்ற முடிவுடன் மீண்டும் கல்லூரிக்குள் வரும் லெனின்,  கல்லூரி வளாகத்திற்குள் வைத்து ஒருவரை கொலை செய்து விடுகிறார். ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருக்கும் நிலையில், கொலை குற்றத்திலும் சிக்கினால் எதிர்காலம் வீணாகிவிடும் என்பதால், குற்றத்தில் இருந்து தப்பிக்க, தனது காதலியான அந்த கல்லூரி மாணவியின் உதவியோடு ஒரு திட்டம் போடுகிறார். 

 

இதற்கிடையே கொலை செய்யப்பட்டவரை தேடி கல்லூரி வளாகத்திற்குள் போலீஸ் வருவதோடு, அவரது ஆட்களும் தேட தொடங்குகிறார்கள். இவர்களை தாண்டி லெனின் தனது திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி தப்பித்தாரா?, அவர் யாரை, எதற்காக கொலை செய்தார்? என்பதை பரபரப்பாக சொல்வதே ‘ரெட் லேபில்’.

 

நாயகனாக நடித்திருக்கும் லெனின், அறிமுக நடிகர் என்ற அடையாளமே தெரியாதவாறு சிறப்பாக நடித்திருக்கிறார். கல்லூரி மாணவர் மற்றும் கல்லூரியை முடித்த காலக்கட்டம் என்று தோற்றத்திலும், நடிப்பிலும் வேறுபாட்டை காட்டுவதற்காக அதிகம் மெனக்கெட்டிருப்பது திரையில் தெரிகிறது. 

 

நாயகிக்கு ஏற்ற தோற்றம் இல்லை என்றாலும் அளவான நடிப்பு மூலம் தனது பணியை நிறைவாக செய்திருக்கும் அஸ்மின், திரைக்கதையில் முக்கியத்துவத்தோடு பயணித்து, இறுதியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

 

காமெடி கலந்த வில்லத்தனத்தின் மூலம் கவனம் ஈர்க்கும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

 

முனீஷ்காந்த், அனுமோகன் ஆகியோர் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார்கள்.

 

குறிப்பிட்ட ஒரு லொக்கேஷனில் கதை நகர்ந்தாலும், வெவ்வேறு கோணங்கள் மூலம் காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன்.

 

கைலாஷ் மேனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், அனைத்து அம்சங்களையும் அளவாக கொடுத்து, படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றிருக்கிறார்.

 

கல்லூரி வாழ்க்கை மற்றும் காதல் பின்னணியில், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை மிக நேர்த்தியாக எழுதிருக்கும் பொன்.பார்த்திபன், பல திருப்பங்கள் மூலம் இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமல் திரைக்கதையை கையாண்டிருக்கிறார்.

 

ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில், புதுமுகங்களை வைத்துக்கொண்டு, எந்த இடத்திலும் தொய்வின்றி படத்தை நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குநர் கே.ஆர்.வினோத், கொலை குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காக நாயகன் மேற்கொள்ளும் திட்டம் தொடர்பான காட்சிகளை சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்க வைத்திருக்கிறார்.

 

ஒரு கல்லூரிக்குள் கதை நடந்தாலும், காட்சிகளின் வடிவமைப்பு மூலம் வெவ்வேறு கோணத்தில் படத்தை நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குநர் கே.ஆர்.வினோத், எதிர்பார்க்காத திருப்பங்கள் மூலம் இரண்டாம் பாதி முழுவதையும் படு சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்று, பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறார்.

 

மொத்தத்தில், ‘ரெட் லேபில்’ தரமான சம்பவம்.

 

ரேட்டிங் 3.2/5