இளமை துள்ளும் காதல் படைப்பாக உருவாகியுள்ள ‘சரீரம்’!

ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி.வி.பெருமாள் எழுத்தி, இயக்கி தயாரித்துள்ள படம் ‘சரீரம்’. இதில், புதுமுகங்கள் தர்ஷன், சார்மி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படம் உன்னதமான காதல் மற்றும் கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கடவுள் ஒவ்வொருவருக்கும் தந்த தனிக் கொடை தான் சரீரம். அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை, தன் சரீரத்தை மாற்றிக்கொள்ளும் உரிமை எவருக்குமில்லை, இந்த கருத்தை ஆழமாக பேசும் படைப்பாகவும் இளமை துள்ளும் காதல் படைப்பாகவும் இப்படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் ஜி.வி.பெருமாள்.
ஒரு காதல் ஜோடி, அவர்களின் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அந்த காதல் ஜோடியை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லையா?. அவர்களின் விதி என்னவானது என்பது தான் இபடத்தின் கதை.
இதுவரை திரையில் காதலுக்காக, பேச்சு, முதல் இதயம் வரை பலவற்றை தியாகம் செய்ததாக பல படங்கள் வந்துள்ளது ஆனால் சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் முதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஜெ.மனோஜ், பாய்ஸ் புகழ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, லில்லி, மிலா ஆகியோருடன் இயக்குநர் ஜி.விபெருமாள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர பிரதேசம், சித்தூர், வேலூர், பெங்களூர், பாண்டிச்சேரி மகாபலிபுரம், கோவளம், சென்னை ஆகிய இடங்களில் 65 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
முழுமையான காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு வி.டி.பாரதிராஜா இசையமைத்துள்ளார். விஜய் ஆனந்த், குமரவேலன் வேதகிரி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். ஸ்டண்ட் மாஸ்டர் தவசி ராஜ் வடிவமைப்பில் 4 சண்டைக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.