Sep 13, 2025 06:27 PM

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார். ’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்து கவனம் ஈர்த்தார். 

 

மேலும், அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லனாக நடித்தாலும், ஆட்டம், பாட்டம், ஆக்‌ஷன், நடிப்பு என தனது நவரச திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.

 

எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் ஒரு சில நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்து வரும் அர்ஜுன் தாஸ், நடிப்பில் வெளியாகியுள்ள ‘பாம்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நகரம் சார்ந்த கதைக்களங்களில் நடித்து வந்த அர்ஜூன் தாஸ், முதல் முறையாக கிராமம் சார்ந்த கதைக்களத்தில் நடித்திருக்கும் இப்படம், அவரை தண்ணீரை போல், எந்த உருவத்திலும் மாற்றலாம் என்பதை நிரூபித்திருக்கிறது. குறிப்பாக, கதைக்கான நாயனகான படம் முழுவதும் வலம் வரும் அர்ஜூன் தாஸின், உடல் மொழி , வசன உச்சரிப்பு என அனைத்தையும் ரசிகர்கள் பாராட்டி கொண்டாடி வருகிறார்கள்.

 

தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வரும் அர்ஜூன் தாஸின், கதை தேர்வு மற்றும் நடிப்பு ஆகியவற்றால், ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ் திரையுலகமே வியந்துள்ள நிலையில், அவரது அடுத்தடுத்த படங்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.