Feb 26, 2026 02:10 PM

’ஃபோர்த் ஃப்ளோர்’ திரைப்பட விமர்சனம்

34c9dc8a70a10625c4e49b8686cb1b85.jpg

Casting : Aari Arujunan, Deepshika, Pavithra, Subramaniya Siva, Thalaivasal Vijay

Directed By : LR Sundarapandiyan

Music By : Tharankumar

Produced By : A Raja

 

கணினி துறையில் பணியாற்றும் ஆரி அர்ஜுனன், பணி மாறுதல் பெற்று மும்பையில் இருந்து சென்னைக்கு வருகிறார். சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், யாரும் வசிக்காத நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தங்குகிறார். தனது பணியுடன், தன்னை காப்பாற்றும்படி தொலைபேசியில் உதவி கேட்ட தனது முன்னாள் காதலியை தேடும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். அப்போது அந்த வீட்டில் அவரது முன்னாள் காதலியின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைபவர், இரவு நேரங்களில் தொடர்ச்சியாக வரும் அமானுஷ்யம் தொடர்பான கனவுகளால் பாதிக்கப்படுகிறார்.

 

கனவு என்றாலும், நிஜத்தில் நடப்பது போல் இருக்கும் சம்பவங்கள் மூலம் தன்னை சுற்றி ஏதோ ஒன்று நடப்பதை அறிந்துக் கொள்ளும் ஆரி அர்ஜுனன், தனது கனவுகளுக்கான தீர்வை நோக்கி பயணப்படும் போது, பல திடுக்கிடும் உண்மைகளை தெரிந்துக் கொள்கிறார். அந்த உண்மைகள் என்ன ?, மாயமான அவரது முன்னாள் காதலி கிடைத்தாரா ?, அவருக்கும் ஆரியின் கெட்ட கனவுகளுக்கும் தொடர்பு இருக்கிறதா ?, ஆகிய கேள்விகளுக்கான விடையை திடுக்கிடும் திருப்பங்களோடு சொல்வதே ‘ஃபோர்த் ஃப்ளோர்’.

 

கணினி துறையில் பணியாற்றும் இளைஞர் கதாபாத்திரமாக இருந்தாலும், பல மர்ம முடிச்சுகளை அவிழ்த்து கதையை நகர்த்தி செல்லும் துப்பறிவாளராக ஆரி பயணித்திருக்கிறார். காதலி பிரிந்த விரக்தி, தனது குழந்தை பற்றிய உண்மை தெரிந்த உடன் வெளிக்காட்டும் குற்ற உணர்ச்சி, தொலைந்த காதலியை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்ற மன போராட்டம், அமானுஷ்ய விசயங்களால் அச்சமடைந்தாலும், அதனுள் இருக்கும் மர்மங்களை கண்டுபிடிப்பதில் காட்டும் தீவிரம் என படம் முழுவதும் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் ஆரி, தனது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி திரைக்கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறது.

 

பவித்ரா மற்றும் தீப்ஷிகா என இரண்டு நாயகிகளும் அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் அளவாக பயணப்பட்டு தங்களது பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். 

 

வில்லனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, முதல் பாதியில் முக பாவனைகளால் மிரட்டினாலும், இரண்டாம் பாதியில் கொஞ்சம் நடிப்பின் மூலமாகவும் மிரட்ட செய்கிறார். இருந்தாலும், அமானுஷ்யங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால், அவரது வில்லத்தனம் பெரிதாக எடுபடவில்லை.

 

தலைவாசல் விஜய், ஆரியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

 

தரண்குமார் இசையில், கு.கார்த்திக் வரிகளில் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும், ஏற்கனவே கேட்ட உணர்வை கொடுக்கிறது. பின்னணி இசை திகில் காட்சிகளில் படபடப்பை அதிகரிக்க செய்யும் விதத்தில் அமைந்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ஜெ.லக்‌ஷ்மண், தலைப்புக்கு நியாயம் சேர்க்கும் விதமாக அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நான்காவது தளத்தை காட்டி பார்வையாளர்களை பயமுறுத்த முயற்சித்திருக்கிறார். மற்றபடி ஒளிப்பதிவில் பெரிதாக ஒன்றுமில்லை.

 

திகில், கிரைம் திரில்லர், சமூக பிரச்சனை என பல அம்சங்கள் நிறைந்த திரைக்கதையை எதிர்பார்ப்புமிக்கதாக நகர்த்திச் சென்றிருக்கிறது ராம் சுதர்ஷனின் படத்தொகுப்பு.

 

எழுதி இயக்கியிருக்கும் எல்.ஆர்.சுந்தரபாண்டியன், திகில் பாணியிலான கதைக்களம் என்றாலும், அதை வெறும் திகில் காட்சிகளின் பின்னணியோடு மட்டுமே சொல்லாமல், காதல், கணவன் - மனைவி உறவு, குழந்தை செண்டிமெண்ட், சமூக பிரச்சனை, கிரைம் திரில்லர் போன்ற பல்வேறு அம்சங்களை பலவித அடுக்குகளாக கொண்டு வடிவமைத்திருக்கும் திரைக்கதையும், திருப்பங்கள் நிறைந்த காட்சிகளும் படத்தை சுவாரஸ்யமாக பயணிக்க வைத்திருக்கிறது. 

 

நாயகனை சுற்றி நடக்கும் அமானுஷ்யம் மற்றும் அதற்கான தீர்வை நாயகனே கண்டறியும் விதம் நாயகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மற்ற கதாபாத்திரங்களை பலம் இழக்க செய்துவிடுகிறது. இதனால், ஆரம்பத்தில் பரபரப்பாக நகர்ந்த கதை ஒரு கட்டத்தில் மெதுவாக நகர்கிறது. இருந்தாலும், தொலைந்த காதலியின் நிலை, அவரது குழந்தை பற்றிய உண்மை, அவர்களை கண்டறியும் நாயகன், ஆகியவை அடுத்து என்ன ? என்ற கேள்வியோடு படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறது.

 

மொத்தத்தில், ‘4த் ஃப்ளோர்’ அச்சப்பட வைக்கும்.

 

ரேட்டிங் 3/5