’அரசன்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்.டி.ஆர் நடிப்பில் உருவாகும் 'அரசன் ' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரைக்கு அருகே உள்ள கோவில்பட்டியில் பூஜையுடன் தொடங்கியது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அரசன்' எனும் திரைப்படத்தில் சிலம்பரசன் TR, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையில் தயாராகி வரும் இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி இருக்கிறது. இந்த படப்பிடிப்பு கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து இருபது நாட்கள் வரை நடைபெறும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் வெற்றிமாறனின் வட சென்னை யுனிவர்ஸாக உருவாகும் இந்த திரைப்படத்தில் சிலம்பரசன் TR கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய வேடத்திலும் தோன்ற இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.
அத்துடன் இந்திய திரையிசையில் முத்திரை பதித்த சர்வதேச அளவிலான இசை கலைஞர் அனிருத் சொந்தமாக இசை நிறுவனம் ஒன்றை முதன் முதலில் தொடங்கி அதனூடாக இப்படத்தின் இசையை உருவாக்குவதால்.. இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே எகிறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய விருதுகளை வென்ற திரை கலைஞர்களான சிலம்பரசன் TR- இயக்குநர் வெற்றிமாறன்- விஜய் சேதுபதி - கலைப்புலி எஸ் தாணு - சமுத்திரக்கனி - கிஷோர் - ஆகிய திறமைசாலிகள் கூட்டணி அமைத்து 'அரசனை' செதுக்கி வருவதால்... இந்தத் திரைப்படம் சர்வதேச அளவில் யாரும் எதிர்பார்க்காத அதிர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை திரையுலகில் ஏற்பட்டிருக்கிறது. இப்படம் தொடர்பாக வெளியான அறிமுக காணொளி பல மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருப்பது இதற்கு சான்றாகும்.

