Dec 11, 2025 07:10 AM

ஆதித்யா பாஸ்கர் - கெளரி கிஷன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

ஆதித்யா பாஸ்கர் - கெளரி கிஷன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகனும், ‘96’ மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவருமான ஆதித்யா பாஸ்கரும், கெளரி கிஷனும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்குகிறார். 

 

ஆதித்யா பாஸ்கர் நாயகனாகவும், கெளரி கிஷன் நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில் சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்ஜின் ஸ்டுடியோஸ் ( Origin Studios) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணதாசன் தயாரித்திருக்கிறார். 

 

Adithya Baskar

 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் , விரைவில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். 

 

படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில், “உண்மை சம்பவத்தை தழுவி தற்போதைய ஜென் ஜீ தலைமுறையினர் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இதில் '96' படத்திற்கு பிறகு மீண்டும் ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் ஜோடி திரையில் மேஜிக் செய்திருக்கிறார்கள். இது அனைத்து ரசிகர்களையும் கவரும்.” என்றார்.