Dec 13, 2025 01:54 PM

’மாண்புமிகு பறை’ திரைப்பட விமர்சனம்

f96f1e1d7e901f94c279d21260baeceb.jpg

Casting : Leo Sivakumar, Gayathri Rema, Ariyan, Kajaraj, Rama, Ashok Raja, Cheranraj, Kadhal Sukumar, Jayakumar Ponsuresh, Aranga Gunaseelan

Directed By : S. Vijay Sukumar

Music By : Deva

Produced By : Siya Productions

 

பறை இசைக்கலைஞர்களான லியோ சிவகுமாரும், ஆரியனும், ஆதிபறை என்ற பெயரில் இசைக் குழு ஒன்றை நடத்தி வருவதோடு, அழிந்து வரும் பறை இசையை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அந்த கலையை வளர்க்கும் முயற்சியிலும், அக்கலையின் பெருமையை உலகறிய செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதே சமயம், பறை இசையை மட்டும் இன்றி அந்த இசைக் கலைஞர்களையும் இழிவாகப் பார்க்கும் சிலரால் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து மீண்டு அவர்கள் நினைத்ததை சாதித்தார்களா ? இல்லையா ?, என்பதை சொல்வது தான் ‘மாண்புமிகு பறை’.

 

நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார் வெற்றி என்ற கதாபாத்திரமாக நடித்திருக்கிறாரே தவிர, பறை இசைக்கலைஞராக நடிக்க முடியாமல் திணறியிருக்கிறார். பறை வாசிக்கும் போது, அவரிடத்தில் எந்தவித உணர்வுப்பூர்வமான அசைவுகளும் இல்லாதது அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்திருக்கிறது.

 

லியோ சிவகுமாரின் நண்பராக நடித்திருக்கும் ஆரியன், ஹீரோவுக்கு இணையாக உணர்வுப்பூர்வமான வசனம் பேசி, நடனம் ஆடி நடித்தாலும் பறை இசைக்கலைஞர் என்ற அடையாளத்தை எந்த இடத்திலும் அழுத்தமாக பதிவு செய்யவில்லை. 

 

நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, உணர்வுப்பூர்வமாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

கஜராஜ், அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை முடிந்தவரை செய்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கும் விதத்தில் இருந்தாலும், பறை இசையின் பலத்தை உணரக்கூடிய விதத்தில் இல்லை. பின்னணி இசை அளவு.

 

ஒளிப்பதிவாளர் ஆர்.கொளஞ்சி குமாரின் கேமரா கிராமத்து அழைகை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேம்குமாரின் படதொகுப்பு காட்சிகளின் வரிசைப்படி இருந்தாலும், படத்திற்கு சுவாரஸ்யம் சேர்க்கும்படி இல்லை. 

 

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.விஜய் சுகுமார், பறை இசையின் பெருமையையும், அந்த இசைக் கருவியை வாசிப்பவர்கள் எப்படி சிறுமைப்படுத்தப்படுகிறார்கள், என்பதையும் அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருந்தாலும், படத்தின் பெரும்பாலான காட்சிகளில் சாதி பிரச்சனை மற்றும் ஆணவக்கொலை பற்றி பேசுவதால், பறை இசையின் தாக்கம் பார்வையாளர்களை பாதிக்க தவறிவிடுகிறது.

 

மொத்தத்தில், ‘மாண்புமிகு பறை’ வெறும் சத்தம் மட்டுமே.

 

ரேட்டிங் 2.5/5