Jan 30, 2026 08:03 AM

‘மெல்லிசை’ திரைப்பட விமர்சனம்

4d469b9923bcbae12c2fb6e56089df65.jpg

Casting : G.Kishore Kumar, Subatra Robert, George Maryan, Harish Uthaman, Dhananya Varshini, Jaswant Manikandan

Directed By : Dhirav

Music By : Shankar Rangarajan

Produced By : Hashtag FDFS - Dhirav

 

தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் கிஷோர், சொந்த வீடு, மனைவி, இரண்டு பிள்ளைகள் என அன்பான குடும்பம், அமைதியான வாழ்க்கை என்று பயணித்தாலும், பாடகராக வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறாமல் போனதால் சற்று தோல்வி மனநிலையில் வாழ்கிறார். ஆனால், அவரது குரலுக்கு பெரும் ரசிகையாக இருக்கும் அவரது மகள், அவரை பாடகராக மேடை ஏற்ற ஆசைப்படுகிறார். தன் மகளுக்காக மேடை ஏறும் கிஷோர், தனது லட்சியப் பாதையில் வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ளும் போது, குடும்பத்தார் மற்றும் சுற்றாரின் ஆதரவு இல்லாததால் மீண்டும் தடுமாற்றம் அடைகிறார். அதன் மூலம், தன்னிடம் இருக்கும் அனைத்தையும் இழந்து போன்ற உணர்வால், விரக்தி மற்றும் தோல்வி மனநிலைக்கு தள்ளப்படுகிறார். அதன் மூலம் அவரது வாழ்க்கை என்னவானது ? என்பதை, குடும்பத்தாரின் ஆதரவும், அன்பும் இல்லாமல் சரிந்து போகும், சராசரி மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் சொல்வதே ‘மெல்லிசை’.

 

சாதனையாளர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களின் பின்னணியில் நிச்சயம் மற்றவர்களுடைய அன்பும், ஆதரவும் இருக்கும், அப்படி இல்லை என்றால் அவர்களால் வெற்றி பெற முடியாது, என்பதை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் திரவ், ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை, அவர்களது பிள்ளைகள் மூலம் விவரிக்கும் உணர்வுப்பூர்வமான கதையாக சொல்லியிருக்கிறார்.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கிஷோர் குமார், ஏக்கங்களோடு வாழும் ஒரு குடும்ப தலைவரின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, தனது அளவான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை தனது கதாபாத்திரத்துடன் தொடர்புபடுத்திக்கொள்ள செய்து விடுகிறார். 

 

கிஷோரின் மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட், குடும்ப பாதுகாப்புக்காக அனுசரித்து போகும் மனைவியாக இயல்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

 

கிஷோரின் மகளாக நடித்திருக்கும் தனன்யா வர்ஷினி மற்றும் மகனாக நடித்திருக்கும் ஜஸ்வந்த் மணிகண்டன், இருவரும் சிறுவர்களாக இருக்கும் போது சரி, இளம் பருவத்திலும் சரி, இயல்பாக நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

ஹரிஷ் உத்தமன் மற்றும் ஜார்ஜ் மரியன் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் திரைக்கதையில் நிறைவாக பயணித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தியின் பணி எளிமையாக இருந்தாலும், கதைக்களத்திற்கு அதிகமான வலிமையை சேர்த்திருக்கிறது. நாயகனின் வீடு மற்றும் அங்கு நடக்கும் சம்பவங்களை காட்சிப்படுத்திய விதம் உண்மைக்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது.

 

சங்கர் ரங்கராஜின் இசையில் பாடல் வரிகள் கதைக்களத்தையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் திரவ், ஒரு மனிதனின் வாழ்க்கை பயணத்தை சுவாரஸ்யமான கதையாக சொல்வதில் கவனம் ஈர்ப்பதோடு, அதை வித்தியாசமான முறையில் சொல்லி படத்தொகுப்பாளராகவும் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.

 

ஒரு நாயகனின் கதையாக அல்லாமல், படம் பார்க்கும் அனைவரும் அந்த கதாபாத்திரத்துடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ளும்படியான ஒரு எளிமையான மனிதனின், எளிமையான வாழ்க்கை, அதில் இருக்கும் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், தோல்விகள் ஆகியவற்றை கடந்து செல்வதை மனதுக்கு நெருக்கமாக சொல்லியிருக்கும் இயக்குநர் திரவ்,  அன்பு இருந்தால் அவை அனைத்தையும் எளிதில் கடந்து விடலாம், என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.

 

கிஷோர், அவரது மனைவி, அவர்களது பிள்ளைகள் மற்றும் அவர்கள் கடன் வாங்கிய ஹரிஷ் உத்தமன், புதிய தலைமை ஆசிரியர் என படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களின் மூலமாக அன்பு மற்றும் அது விதைக்கும் நம்பிக்கையை பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் திரவ், தன் எழுத்து மூலம் மனிதத்தை விதைத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘மெல்லிசை’ இளையராஜாவின் பாடல்கள் போல் மனதை வருடும்.

 

ரேட்டிங் 4/5