Jan 30, 2026 05:40 AM

‘லாக்டவுன்’ திரைப்பட விமர்சனம்

7b0a93549210b78330a5ff7381d4f525.jpg

Casting : Anupama Parameswaran, Charlie, Nirosha, Priya Venkat, Livingston, Indhumathi, Rajkumar, Shamji, Lollu Sabha Maran, Vinayaga Raj, Vidhu, Sanjivie, Priya Ganesh, Asha

Directed By : AR Jeeva

Music By : NR Raghunanthan & Siddharth Vipin

Produced By : Lyca Productions Pvt Ltd - Subaskaran

 

நாயகி அனுபமா பரமேஸ்வரன், ஐடி துறையில் பணியாற்ற விரும்பி அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால், அவருக்கு இரவு நேரத்தில் பணியாற்றும் வாய்ப்புகள் கிடைப்பதால் குடும்பத்தார் தடை விதித்து விடுகிறார்கள். எப்படியாவது வேலைக்கு செல்ல வேண்டும், அது பகல் நேர பணியாக இருக்க வேண்டும், என்பதில் தீவிரம் காட்டி வரும் அனுபமா பரமேஸ்வரன், வேலை விசயமாக தனது தோழியுடன் ஒருவரை சந்திக்க செல்கிறார். மது விருந்து, ஆட்டம், பாடல் என்று அங்கு வேறு ஒரு உலகத்தை பார்க்கும் அனுபமா பரமேஸ்வரனுக்கு, அந்த உலகத்தில் வாழ வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. இதற்காக தன் பெற்றோர்களிடம் பொய் சொல்லிவிட்டு, ஆட்டம், பாடல் என்று மகிழ்ச்சியில் திளைப்பதோடு, போதையில் மயங்கி விடுகிறார்.

 

மறுநாள் காலை வீட்டுக்கு சென்று வழக்கம் போல் தனது வாழ்க்கையை தொடரும் அனுபமா பரமேஸ்வரன், சில வாரங்கள் கழித்து எதிர்பார்க்காத பெரும் சிக்கலில் சிக்கிக் கொள்கிறார். அதற்கு காரணம், அந்த மது விருந்து தான் என்று தெரிந்தாலும், அதில் இருந்தவர்களில் யார் ? என்று தெரியாத பெரும் குழப்பம் ஒரு பக்கம் இருக்க, குடும்பத்திற்கு தெரியாமல் அந்த பிரச்சனையில் இருந்து மீள்வது எப்படி ? என்ற போராட்டத்தையும் எதிர்கொள்கிறார். அவரது பிரச்சனை என்ன ?, அதில் இருந்து அவர் மீண்டாரா ?, என்பதை உணர்வுப்பூர்வமாகவும், பெண்களுக்கான எச்சரிக்கையாகவும் சொல்வதே ‘லாக்டவுன்’.

 

பெண்கள் மட்டும் அல்ல ஆண்களாக இருந்தாலும், தங்களுக்கான பிரச்சனையை குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும், இல்லை என்றால் எத்தகைய பாதிப்புகளுக்கு ஆளாவார்கள், என்ற ஒரு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்யும் ஒரு படைப்பாக கொடுத்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா, அதை ஊரடங்கு உத்தரவு என்ற உண்மை சம்பவத்துடன் சேர்த்து மிக சுவாரஸ்யமான திரைப்படமாக இயக்கியிருக்கிறார்.

 

தென்னிந்திய மொழிகளில் பல முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததற்காகவே அவரை பாராட்ட வேண்டும். அழுத்தமான அதே சமயம் சர்ச்சையான ஒரு கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருப்பதோடு, தனது நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி, பார்வையாளர்களிடம் பாராட்டு பெற்று விடுகிறார். 

 

கட்டுப்பாடு மிக்க குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், புதிய உலகத்தை பார்த்ததும் பரவசமடைவது, அதில் பயணிக்க வாய்ப்பு கிடைத்ததும், அனைத்தையும் மறந்துவிட்டு உற்சாகமாக நடனம் ஆடுவது, பிறகு பிரச்சனையை எதிர்கொண்டு, அதில் இருந்து மீள்வதற்காக போராடுவது, என்று அனைத்து ஏரியாவிலும் அடித்து விளையாடியிருக்கும் அனுபமா பரமேஸ்வரனுக்கு விருது உறுதி, என்பதை அடித்து சொல்லலாம்.

 

நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் சார்லி மற்றும் நிரோஷா ஆகியோரது எதார்த்தமான நடிப்பு நடுத்தர குடும்பத்தாரின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

 

பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல், தேர்வு செய்த லொக்கேஷன்கள் மற்றும் பயன்படுத்திய விளக்குகள், வண்ணங்கள் அனைத்தும், ஒரு திரைப்படத்தை தாண்டி, எதார்த்தமான ஒரு பெண்ணின் வாழ்க்கையை பார்க்கும் உணர்வை கொடுக்கிறது. குறிப்பாக வீட்டுக்குள் படமாக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அனைத்தும் இயல்பாக சித்தரிக்கப்பட்டிருப்பதோடு, உணர்வுப்பூர்வமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது.

 

இசையமைப்பாளர்கள் என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இருவரது இசையில் பாடல்கள் பட்டையை கிளப்பியிருப்பதோடு, கதாபாத்திரத்தின் உணர்வுகளை பிரபலிக்கவும் செய்திருக்கிறது. பின்னணி இசையும் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை பார்வையாளர்களிடமும் தொற்றிக் கொள்ள செய்கிறது. 

 

எதிர்பாராத ஒரு சிக்கல், அதுவும் பெரும் சிக்கல், அதில் இருந்து மீள்வாரா ? இல்லையா ?, என்பதை பரபரப்பாக சொல்லாமல், அதன் மூலம் ஒரு பெண் எப்படி பாதிக்கப்படுகிறார், அதில் இருந்து மீள்வதற்கு எப்படி எல்லாம் போராடுகிறார், என்பதை தனது படத்தொகுப்பு மூலம் பார்வையாளர்களிடம் மிக நேர்த்தியாக கடத்தியிருக்கிறார் வி.ஜெ.சாபு ஜோசப்.

 

எழுதி இயக்கியிருக்கும் ஏ.ஆர்.ஜீவா, கொரோனா ஊரடங்கு உத்தரவு காலக்கட்டத்தை கதையின் முக்கிய அம்சமாக பயன்படுத்தியிருந்தாலும், ஒரு பெண் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையை மிக அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, அதற்கான திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.

 

நாயகிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் யாராக இருப்பார் ? என்ற கேள்வியை எழுப்பி பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா, நாயகி தன் பிரச்சனையில் இருந்து மீள்வாரா ? என்ற மற்றொரு கேள்வியின் மூலம், படம் முழுவதையும் எதிர்பார்ப்புடன் நகர்த்தி செல்கிறார். 

 

ஒற்றை பதிலுக்காக பார்வையாளர்களை எதிர்பார்ப்புடன்  படம் முழுவதும் பயணிக்க வைத்து, அந்த பதிலை சொல்லாமல், அதே சமயம், பார்வையாளர்கள் மனதில் எழுந்த கேள்விகளை மறக்கடிக்கும் விதத்தில், எதிர்பார்க்காத திருப்பத்தின் மூலம் பெரும் அதிர்ச்சியளிக்கும் இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா, இறுதியில் தான் சொல்ல முயற்சித்த கருத்தை மிக அழுத்தமாக பதிவு செய்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார். 

 

மொத்தத்தில், ‘லாக்டவுன்’ இறுக்கம்.

 

ரேட்டிங் 3.8/5