‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்.எல்.பி மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் 'டியர் ரதி'. இந்தப் படத்தை 'இறுதிப் பக்கம்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரவீன் கே.மணி இயக்கியுள்ளார்.
படம் பற்றி இயக்குநர் பிரவீன் கே.மணி கூறுகையில், “இன்றைய சூழலில் ஆணோ பெண்ணோ தனக்கு விருப்பமான ஒத்த அலை வரிசை மனம் கொண்ட எதிர்பாலின நட்பைத் தேடினால் அடைவது சுலபம். அந்த நட்பு காதலாவது கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமல்ல, மிகக்கடினம். அப்படிப் பிறரிடம் பேசத் தயங்கும் -குறிப்பாகப் பெண்களிடம் பேசத் தயங்கும் ஓர் வாலிபன் ஸ்பா போன்ற ஓர் அழகு நிலையத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்து 'டேட்டிங்'கிற்காக வெளியே அழைத்துச் செல்கிறான் .அதே நாளில் அந்தப் பெண்ணைத் தேடி போலீஸ் ஒரு பக்கம், ரவுடிக் கும்பல் ஒரு பக்கம் எனத் துரத்துகிறார்கள்.வெளியே சென்றவர்கள் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அது என்ன மாதிரியான பிரச்சினை ?அதை எப்படி எதிர்கொண்டார்கள்? என்பதுதான் 'டியர் ரதி' படத்தின் கதை.
இன்றைய தலைமுறையினர் காதல் இணையைத் தக்க வைத்துக் கொள்ள எப்படி எல்லாம் போராடுகிறார்கள்? அவர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள், சிக்கல்கள் என்ன?அதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதைச் சொல்லும் வகையில் 'ரொமான்டிக் காமெடி'யாக இந்த 'டியர் ரதி' திரைப்படம் உருவாகி இருக்கிறது.’ என்றார்.
படத்தில் சரவண விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். இவர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் 84 நாட்கள் இருந்தவர். அவர் அறிமுகமாகும் படமிது. நாயகியாக ஹஸ்லி அமான் நடித்துள்ளார் இவர் மலையாளத்தில் கதிர் நாயகனாக நடித்த 'மீஷா' படத்தில் நடித்த இவர், இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். வில்லனாக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் ,நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில் படித்தது மட்டுமல்லாமல் பலருக்கும் நடிப்புப் பயிற்சி அளித்து வருபவர். 'மதராஸி' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பாத்திரத்திற்கான உடல் மொழியை வடிவமைத்தவர் இவர்தான். இவர்களுடன் சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியன் மற்றும் பலர் நடித்துள்ளனர் .
படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜோன்ஸ் ரூபர்ட். இவர் 'பொறியாளன்', 'சட்டம் என் கையில்' படங்களுக்கு இசையமைத்தவர். ஒளிப்பதிவு செய்துள்ளவர் லோகேஷ் இளங்கோவன். இவர் 'நாய்சேகர்' படத்தில் உதவி ஒளிப்பதிவாளர், 'ஹர்ஹரா' படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகப் பணியாற்றியவர். பிரேம்.பி படத்தொகுப்பு செய்துள்ளார். இவர் செல்வா ஆர்கே - யிடம் உதவி படத் தொகுப்பாளராகப் பணியாற்றி இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். கலை இயக்கம் ஜெய் ஜெ.திலீப், நிர்வாகத் தயாரிப்பாளர் மனோ வி கண்ணதாசன், தயாரிப்பு நிர்வாகம் : ஹென்றி குமார். இப்படி புதுமுகங்களையும் அனுபவி சாலிகளையும் இணைத்துப் படக் குழு அமைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் பிரவீன். கே.மணி.
தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹரி உத்ரா வெளியிடும் ‘டியர் ரதி’ திரைப்படம் வரும் 2026 ஆம் ஆண்டு, ஜனவரி 2 ஆம் தே4தி வெளியாக உள்ளது.

