2020 ஆம் ஆண்டு முதல் வாரத்தில் 7 படங்கள் ரிலீஸ்!

நேற்றுடன் நிறைவடைந்த 2019 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் 2019 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் வெற்றி பெற்ற படங்கள் என்றால் பாதி கூட இருக்காது, என்றாலும், கடந்த 2019 ஆம் வருடம் தமிழ் சினிமாவுக்கு நல்ல காலமாகவே இருந்தது. எதிர்ப்பார்க்காத படங்கள் எல்லாம் பெரிய லாபத்தை குவித்தது தான் இதற்கு காரணம்.
இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு முதல் வாரமான வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) தமிழ் சினிமாவில் மொத்தம் 7 படங்கள் வெளியாக உள்ளது.
‘பிழை’, ‘தொட்டு விடும் தூரம்’, ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’, ‘தேடு’,’ஆனந்த வீடு’ மற்றும் தெலுங்கு டப்பிங் படமான ‘விஜயன்’, ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ இந்த 7 படங்கள் தான் 2020 ஆம் ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமையன்று தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படங்களாகும்.
மைம் கோபி, சார்லி, சிறுவர்கள் ‘காக்கா முட்டை’ ரமேஷ், ‘அப்பா’ நசாத் ஆகியோர் நடித்திருக்கும் ‘பிழை’ படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்வேல் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். தாமோதரன் தயாரித்திருக்கிறார். பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே சரியான புரிதல் இல்லாமல் இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இப்படம் பேசுகிறது.
உஷா சினி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ராமநாதன் தயாரித்திருக்கும் ‘தொட்டு விடும் தூரம்’ படத்தை வி.பி.நாகேஸ்வரன் எழுதி இயக்கியிருக்கிறார். நோவா இசையமைத்திருக்கிறார். காதல் கதையோடு மக்களுக்கு நல்ல மெசஜ் ஒன்றையும் சொல்லியிருக்கும் இப்படத்தில் விவேக் ராஜ் ஹீரோவாகவும், மோனிகா சின்னகொட்லா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம் புலி, பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவான ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ தமிழ், தெலுங்கு, என்று பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. என்.கே.பிரகாஷ், புஷ்கர் மல்லிகர்ஜுனா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை சச்சின் ரவி இயக்கியிருக்கிறார். பி.அஜனீஸ் லோக்நாத், சரண் ராஜ் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.
கிஷோர் சினி ஆர்ட்ஸ் சார்பில் சிவகாசி முருகேசன் தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கும் ‘தேடு’ படத்தில் ஹீரோயினாக மேக்னா ராஜ் நடித்திருக்கிறார். சுசி.ஈஸ்வர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு டி.ஜே.கோபிநாத் இசையமைத்திருக்கிறார்.
நிலா மூவி மேக்கர்ஸ் சார்பில் ராஜாதிராஜன் தயாரித்திருக்கும் ‘ஆனந்த வீடு’ படத்தை ஜி.சுகுமாரன் இயக்கியிருக்கிறார். தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக சிவாயம் தந்தை கதாப்பாத்திரத்தில் நடிக்க, மகளாக சுகானா நடித்திருக்கிறார். ஹீரோவாக துர்கா பிரசாத் நடித்திருக்கிறார். கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார்.
’பாகுபலி’ என்ற மாபெரும் வெற்றியை கொடுத்த எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ’யமதொங்கா’ படத்தின் தமிழ் டப்பிங் தான் ‘விஜயன்’. ஜுனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் மம்தா மோகந்தாஸ், குஷ்பு, ரம்பா, பிரியா மணி, பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.கே.ராஜராஜா இப்படத்தின் தமிழ் வசனத்தை எழுதியிருக்கிறார். எம்.ஜெயகீர்த்தி, ரேவதி மேகவண்ணன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். மரகதமணி இசையமைத்திருக்கிறார்.
எஸ்.எச்.மீடியா ட்ரீம் நிறுவனம் சார்பில் சாகுல் ஹமீது தயாரித்திருக்கும் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ படத்தை நவீன் மணிகண்டன் இயக்கியிருக்கிறார். லோகேஷ் இசையமைத்திருக்கிறார். விகாஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் மதுமிதா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் டெல்லி கணேஷ், ராகுல் தாத்தா, விஜய் டிவி ராமர், அம்பானி சங்கர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடிக்க, 22 வருடங்களுக்குப் பிறகு சித்ரா இப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரியாகியிருக்கிறார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் காதல், செண்டிமெண்ட் என்று கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படமாககும்.
இந்த 7 படங்களும் 2020 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் முதல் வாரத்தில் வெளியான படங்கள் என்ற பெருமையை பெற்றிருக்கும் நிலையில், மக்களிடம் வரவேற்பு பெற்று எந்த படம் வெற்றிப் பெற போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.