தினேஷ் ராஜ் மற்றும் தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் தொடங்கியது!
Zinema Media and Entertainment Ltd. சார்பில் தினேஷ் ராஜ் வழங்க, Creative Entertainers & Distributors நிறுவனத்தின் ஜி. தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளியான ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி பாராட்டுகளைப் பெற்ற நடிகர் பவிஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா, முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார் மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இதனை தொடர்ந்து, இயக்குநர் செல்வராகவன் அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
“I’m Super, Super, super happy that Pavish is going to learn from master Dhananjheyan sir” என்று குறிப்பிட்டிருந்தார்.
பவிஷ் கடந்த ஆறு மாதங்களாக பல இயக்குநர்களிடமிருந்து வந்த திரைக்கதைகளை கேட்டபின், இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் அவர்களின் கதையை தேர்வு செய்துள்ளார்.
மகேஷ் ராஜேந்திரன், இயக்குநர் லக்ஷ்மன் அவர்களின் ’போகன்’ மற்றும் ’பூமி’ போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அவர் தற்போது இளம் தலைமுறை ரசிகர்களுக்கான ஒரு ரொமான்டிக் என்டர்டெய்னர் படத்தை இயக்கி வருகிறார்.
தெலுங்கு திரைப்பட உலகில் இருந்து ஒரு புதிய நடிகை, யூடியூப் சென்சேஷன் எனப் பெயர் பெற்ற நாகா துர்கா, தமிழில் தனது முதல் திரையறிமுகத்தைச் செய்யவிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார், ’ஆரண்ய காண்டம்’, ’மத கஜ ராஜா’, ’விடாமுயற்சி’ போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்த தேசிய விருது பெற்ற என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார், பல பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றிய மகேந்திரன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார், ஆடை வடிவமைப்பாளராக ஹர்ஷிகா பணியாற்றுகிறார், அபிஷேக் சண்டை காட்சிகளை இயக்குகிறார். மேலும், Think Music ஆதரவுடன் புதிய இசை திறமையாளர்கள் அறிமுகமாகவிருக்கிறார்கள். அவர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும், என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் பிரபல நடிகர்கள் பலர் இடம்பெறுகின்றனர்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை இயக்குநர் விஜய்-யின் D Studios Post குழு மேற்கொள்கிறது.
Zinema Media and Entertainment Ltd மற்றும் Creative Entertainers & Distributors நிறுவனங்கள் இதற்கு முன் இணைந்து வெளியிட்ட ’பிளாக்மெயில்’ (BLACKMAIL) திரைப்படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே அணியினர் மீண்டும் இணைந்து இந்த இளம் தலைமுறையினருக்கான காதல் திரைப்படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று (அக்டோபர் 27, 2025) சென்னையில் பூஜையுடன் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று, 2026 தொடக்கத்தில் முடிவடையும் படி திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
படம் குறித்து இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் கூறுகையில், “இந்த திரைப்படம் இளம் தலைமுறை (Gen Z) ரசிகர்களும், குடும்பங்களும் ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல பிரபல நடிகர்களும் புதிய அம்சங்களும் இணைந்துள்ளதால், அனைத்து தரப்பினருக்கும் இது பிடிக்கும் என நம்புகிறேன். இந்த படம் மரபும் நவீனமும் கலந்த, ஆச்சரியம் மற்றும் கவிதை நிறைந்த காதல் கதையாக உருவாகி வருகிறது. 2026 கோடை வெளியீடாக இப்படம் இருக்கும். மேலும், இத்திரைப்படம் குறித்த கூடுதல் தகவல்களும், நடிகர் பட்டியலும் விரைவில் அறிவிக்கப்படும்.”

