‘ஆர்யன்’ கதை கேட்டு அசந்துபோன அமீர்கான்! - வெற்றியை உறுதி செய்த விஷ்ணு விஷால்

குறிப்பிட்ட பாணியிலான கதைகளில் மட்டும் இன்றி பல்வேறு கதைக்களங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து வரும் நடிகர்களில் விஷ்ணு விஷால் முக்கியமானவர். அவரது முதல் படம் தொடங்கி சமீபத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘ஓஹோ எந்தன் பேபி’ படம் வரை இதற்கு உதாரணம்.
நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் பிஸியாக வலம் வரும் விஷ்ணு விஷால் கையில் தற்போது 5 படங்கள் உள்ளன. அதில் முதலாவதாக வெளியாக இருக்கும் படம் ‘ஆர்யன்’. டார்க் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானர் படமான இதில் விஷ்ணு விஷால் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு, படத்தின் கதை என்னவாக இருக்கும், என்பதை கணிக்க முடியாததாகவும் இருக்கிறது.
இந்த நிலையில், ‘ஆர்யன்’ படம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் பிரவீன்.கே, இப்படத்தின் கதையை கேட்டு அசந்து போன பாலிவுட் நடிகர் அமீர்கான், இதன் இந்தி பதிப்பில் நடிக்கவும் ஆர்வம் காட்டியதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் மேலும் கூறுகையில், “’கட்டா குஸ்தி’ படம் தொடர்பாக அமீர்கான் சாரிடம் பேசியிருந்தேன், அப்போது மும்பைக்கு வேறு ஒரு வேலையாக சென்ற போது அவரை சந்தித்தேன், ’கட்டா குஸ்தி’ எப்படி போனது, என்று விசாரித்தவர், தற்போது என்ன படம் போய்க்கொண்டிருக்கிறது, என்றார். நான் ஆர்யன் படம் பற்றி சொன்னேன், பிறகு அதன் ஒன்லைன் கேட்டார், அதை சொன்னேன். அவருக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை உடனே, ”கதை கேட்கலாமா” என்று கேட்டார். இயக்குநர் பிரவீனும் என்னுடன் இருந்ததால், சரி, என்றேன்.
பிறகு அவர் சொன்னபடியே கதை கேட்க ரெடியாகி விட்டார். கதை சொன்னோம், அவருக்கு பிடித்துவிட்டது. உடனே ”இந்த படத்தை இந்தியிலும் எடுக்கலாம், வில்லனாக நான் நடிக்கிறேன், ஹீரோவாக நீங்க நடிங்க” என்று கூறினார். ஆனால், சில காரணங்களினால் அது நடக்காமல் போய்விட்டது. ஆனால், அமீர்கான் சாரையே இந்த கதை கவர்ந்ததால் எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. இப்போது படம் முடிந்துவிட்டது, படத்தை பார்த்த பலரும் அமீர்கான் சாரைப் போல வியந்து பாராட்டுவதோடு, வெற்றி நிச்சயம், என்றும் சொல்கிறார்கள்.
சைக்கோ திரில்லர் படம் என்றால் ‘ராட்சசன்’ தான் நினைவுக்கு வரும், ஆனால் அந்த படம் போல் இது இருக்காது. சைக்கோ திரில்லர் படங்கள் என்றாலே பார்வையாளர்கள் மனதில் ஒரு கதை ஓடும், அந்த கதை இந்த படத்தில் இருக்காது, அது தான் இந்த படத்தின் சிறப்பு. பொதுவாக என் படத்தில் எதாவது ஒரு ஸ்பெஷல் விசயங்கள் மறைக்கப்பட்டிருக்கும், படம் வெளியாகும் போது தான் அது தெரியும். அதுபோல் இந்த படத்தில் வில்லன் செல்வராகவன் என்பதை சொல்லிவிட்டாலும், அவர் எப்படிப்பட்ட வில்லத்தனத்தை செய்கிறார், என்பது தான் படத்தின் சிறப்பு, அது இதுவரை பார்த்திராத விசயமாக இருக்கும்.
இந்த படத்தின் கதையை கேட்ட உடன் நடிக்க வேண்டும், என்று தோன்றிவிட்டது. அதே சமயம் இயக்குநர் சொல்லும் இந்த வழக்கு அல்லது குற்றம் உண்மையில் நடந்தால், காவல்துறை எப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்திருப்பார்கள், என்று எனக்கு தோன்றியது. அப்போது என் அப்பாவிடம் சந்தேகத்திற்காக கேட்ட போது, அவரே சற்று அதிர்ச்சியாகி, அமைதியாகிவிட்டார். அப்போது தான் இந்த விசயம் புதிது என்பது எனக்கே புரிந்தது. காவல்துறை அதிகாரியையே யோசிக்க வைக்கிறது, என்றால் இது எப்படிப்படதாக இருக்கும் என்று யோசித்தேன். தற்போது படம் பார்த்தவர்களும் அதையே உணர்கிறார்கள், நீங்களும் படம் பார்த்த பிறகு நான் சொன்னது சரி என்று நினைப்பீர்கள்.” என்றார்.
செல்வராகவன் பல படங்களில் வில்லனாக நடித்து விட்டாரே, இதில் என்ன புதிதாக பண்ணப் போகிறார்? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் பிரவீன்.கே, “இந்த படத்திற்காக நாங்கள் செல்வராகவன் சாரை அணுகும் போது அவர் பெரிதாக நடிக்கவில்லை. இந்த படத்தின் மூலம் தான் அவர் வில்லனாக அறிமுகமாக இருந்தார். ஆனால், இப்போது அவர் பல படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். இருந்தாலும், மற்ற படங்களில் பார்க்கும் செல்வராகவனை இந்த படத்தில் பார்க்க மாட்டீர்கள்.” என்றார்.
படம் காலதாமதம் ஆனது ஏன் ? என்ற கேள்விக்கு பதில் அளித்த விஷ்ணு விஷால், “இந்த படம் நிச்சயம் பண்ண வேண்டும் என்று இருந்தேன். அதே சமயம், சில படங்களுக்கு கொடுக்கப்பட்ட தேதிகளில் ஏற்பட்ட குளறுபடிகளால் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விட்டது. பிறகு பொறுத்தது போதும் என்ற நிலையில், இந்த படத்தை முடித்த பிறகே மற்ற படங்களின் வேலைகளை பார்க்க வேண்டும், என்று முடிவு செய்து படப்பிடிப்பை முடித்து விட்டோம்.” என்றார்.
சைக்கோ திரில்லர் படம் என்றாலே அதற்கான ரசிகர்களை கவர்வதற்காக சில வன்மமான காட்சிகள் இருக்கும், இரத்தம் தெறிக்கும், அப்படி தான் இந்த படமும் இருக்குமா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகர் விஷ்ணு விஷால், “என் படங்களை பொறுத்தவரை, கதை கேட்கும் போதே இது திரையரங்கத்திற்கான படமா இல்லையா என்பதை முடிவு செய்து விடுவேன். ராட்சசன் படத்தில் கொலைகள் இருக்கும், ஆனால் காட்சிகளாக வெட்டுவதையோ, இரத்தம் தெறிப்பதையோ காட்ட மாட்டோம். அதனால், தான் அந்த படத்தை குடும்ப ரசிகர்கள் பார்த்தார்கள், அதுபோல் தான் ஆர்யன் படத்திலும், பயமுறுத்தும் காட்சிகள் இருக்கும், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என்று தொழில்நுட்ப ரீதியாக ரசிகர்களை மிரட்டுமே தவிர, அந்த காட்சிகளில் வெட்டுவது, இரத்தம் தெறிப்பது, வன்மம் என எதுவுமே இருக்காது. எனவே, இந்த படத்தையும் நிச்சயம் குடும்பமாக பார்க்கலாம். இது முழுக்க முழுக்க திரையரங்கத்திற்கான படம், அனைத்து தரப்பினருக்குமான படம். இதில் சொல்லப்பட்டிருக்கும் குற்றம் மற்றும் அதன் பின்னணி புதிதாக இருக்கும்.” என்றார்.
தொடர்ந்து தயாரிப்பாளராக பயணிப்பது கடினமாக இல்லையா ? என்ற கேள்விக்கு, “நான் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க, சுமார் 27 வருடங்கள் ஆகிவிட்டது, அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், நான் விரும்பியது போல் சில படங்களில் நடிக்க வேண்டும், அதற்காக தான் தொடர்ந்து தயாரிப்பாளராக பயணிக்கிறேன். இதனால் எனது நேரம் மிஞ்சமாகிறது. நேரம் விலை மதிக்க முடியாதது, நான் தயாரிப்பாளராக இருக்கும் போது அந்த நேரம் எனக்கு அதிகமாக கிடைக்கிறது. அதனால் தான் தொடர்ந்து தயாரிக்கிறேன். இப்போது நான் மட்டும் தனியாக தயாரிக்க வில்லை, சிலருடன் கூட்டணி வைத்தும் தயாரிக்க தொடங்கியிருக்கிறேன்.” என்றார் விஷ்ணு விஷால்.
மேலும், இந்த படத்தின் வெற்று உறுதி செய்யப்பட்டு விட்டது. இதை நான் அதீத நம்பிக்கையுடன் சொல்லவில்லை, நம்பிக்கையுடன் சொல்கிறேன். காரணம், படத்தை பலர் பார்த்துவிட்டார்கள், அவர்கள் அனைவரும் சொன்னது இது தான். என் மகன் பெயரில் வெளியாகும் படம் வெற்றி படமாக அமைவதும் எனக்கு பெரும் மகிழ்ச்சி, என்று உற்சாகமாக கூறினார் விஷ்ணு விஷால்.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்கும் இப்படத்திற்கு ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் மானசா செளத்ரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடம் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளியாகும் ‘ஆர்யன்’ திரைப்படம் கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் ஒரே நாளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.