நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 46.
நடிகர் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்றிருந்த போது திடீரென்று மயக்கமடைந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரை படக்குழுவினர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ரோபோ சங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சில தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில் ரோபோ சங்கர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் இன்று இரவு சுமார் 8.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு குறித்து அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் குறைப்பு சிகிச்சை மேற்கொண்டதால் மிகவும் மெலிந்து காணப்பட்டார். பிறகு அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் மீண்டும் பழையபடி உடல்நிலை தேறி வந்து படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது திடீரென்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.