Jul 24, 2021 10:15 AM

இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் விஜய் ஆண்டனி!

இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் விஜய் ஆண்டனி!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல வெற்றிப் படங்களை கொடுத்த விஜய் ஆண்டனி, நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்து வெற்றிப்பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

 

விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியான படங்களில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படங்களில் ஒன்று ‘பிச்சைக்காரன்’. சசி இயக்கிய இப்படம் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கேயும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

 

இந்த நிலையில், ‘பிச்சைக்காரன் 2’ படத்தை தயாரித்து ஹீரோவாக நடிப்பதோடு, இயக்கவும் செய்யும் விஜய் ஆண்டனி, தனது பிறந்தநாளான இன்று (ஜூலை 24) தான் இயக்குநர் அவதாரம் எடுப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

இது குறித்து விஜய் ஆண்டனி கூறுகையில், “ஒரு நீண்டகால கனவு இறுதியாக நனவாகிறது. இந்த புதிய அவதாரம் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. நீண்ட காலமாக எனது மனதில் இயக்குநர் ஆகும் ஆசை இருந்தது. ஒரு நடிகராக ஒவ்வொரு திரைப்படத்திலும், நான் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன், பல்வேறு திரைப்பட இயக்குநர்களிடமிருந்து பல நுட்பங்களையும், திறன்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எந்தவொரு படைப்பாளிக்கும், தான் பணிபுரியும்  துறை பற்றிய விழிப்புணர்வு இருப்பது  நன்மை தரும் அம்சமாகும். இசையமைப்பாளராகவும் ஒரு நடிகராகவும் இத்துறையில் சிறந்ததொரு  வெற்றியைப் பெற்றிருப்பது எனது அதிர்ஷ்டம். எனது திறமைகளை வளர்த்துக் கொள்ளும், இந்த திரைப்பயணத்தில், என்னை ஆதரித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு நான்  இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். 

 

Pichaikaran 2

 

எனது பிறந்தநாளின் இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், ‘பிச்சைக்கரன் 2’ திரைப்படத்தில், இயக்குநராக எனது புதிய பயணம் துவங்குவதை, உங்களுக்கு தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மிகப்பெரும் பட்ஜெட்டில் ஒரு பிரமாண்டமான படைப்பாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் நாயகி பாத்திரத்தில் நடிக்க, முன்னணி நடிகைகளுடன்  பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.  ரசிகர்களுக்கு செண்டிமென்டும், பொழுதுபோக்கும், சரி விகிதத்தில் கலந்த சிறப்பானதொரு அனுபவத்தை ’பிச்சைக்கரன் 2’ திரைப்படம் தரும். இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.” என்றார்.