’மகுடம்’ படத்தின் இயக்குநரான நடிகர் விஷால்! - இயக்குநரின் மது போதையால் நிகழ்ந்த விபரீதமா?

’ஈட்டி’ மற்றும் ‘ஐங்கரன்’ படங்களை இயக்கிய இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படம் பற்றி பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது படத்தை விஷாலே இயக்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூஜையுடன் ஊட்யில் தொடங்கிய படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், திடீரென்று நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்த படக்குழு படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருதாக அறிவித்தது. இதற்கிடையே, இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த மாதம் ஆரம்பத்தில் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாகவும் படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில், ‘மகுடம்’ படத்தில் நடிப்பதோடு, படத்தை விஷால் இயக்கவும் செய்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரித்ததில், தகவல் உண்மை தான் என்று படப்பிடிப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இதற்கான காரணமாக படப்பிடிப்பு வட்டாரம் சொன்ன தகவல் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது.
இயக்குநர் ரவி அரசு படப்பிடிப்பு நடக்கும் போதே மது அருந்திவிட்டு போதையில், படப்பிடிப்பு தளத்தில் தகாராறு செய்தாராம். இதனால் படப்பிடிப்பில் பிரச்சனை ஏற்பட்டு, படப்பிடிப்பும் நின்றதாம். ஆனால், அவர் செய்த தவறுக்காக தயாரிப்பாளருக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று எண்ணிய நடிகர் விஷால், இயக்குநருக்கு அறிவுரை சொல்லி மீண்டும் படப்பிடிப்பு நடத்த தொடங்கினாராம்.
ஆனால், விஷால் உள்ளிட்ட பலரின் அறிவுரையை கேட்காத இயக்குநர் ரவி அரசு தொடர்ந்து, மது அருந்திவிட்டு படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதோடு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் சண்டையிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால், தொடர்ந்து அவருடன் பணியாற்ற முடியாது என்று பலர் சொல்ல, படப்பிடிப்பும் நின்றதாம். அவரால் படப்பிடிப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த விஷால், இனி படத்தை தானே இயக்குவதாக முடிவு எடுத்தாராம்.
அதன்படி, தற்போது விஷால் ‘மகுடம்’ படத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவும், இயக்குநர் ரவி அரசு போதையில் வலம் வருவதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என்று பல புதியவர்களை அறிமுகப்படுத்திய பிரபலமான நிறுவனமாக திகழும் சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் 99 வது படம் ’மகுடம்’ என்பது குறிப்பிடத்தக்கது.