Apr 17, 2021 04:26 AM

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் காலமானார்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான விவேக், சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டும் இன்றி சமூக பணிகளில் ஆர்வம் கொண்ட விவேக், தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டு வந்ததோடு, மரக்கன்று நடுதல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வந்தார்.

 

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர், தன்னை போல் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும், என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

 

இதற்கிடையே, நேற்று விவேக் தனது வீட்டில் இருந்த போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது உடல் நிலை குறித்து நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில், விவேக்கின் உடல் நிலை மோசமான நிலையில் இருப்பதாகவும், இதயத்திற்கு செல்லும் இரத்தம் திடீரென்று தடை பட்டதால் தான் அவருக்கு இந்த நிலை என்றும் தெரிவித்தனர். மேலும், இது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் ஏற்பட்ட விலை என்று சொல்ல முடியாது, என்றும் தெரிவித்தனர்.

 

இந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் நடிகர் விவேக் மரணமடைந்தார், என மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

 

தற்போது விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

1987 ஆம் ஆண்டு வெளியான பாலச்சந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான விவேக் தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் இதுவரை சுமார் 220 படங்களில் நடித்துள்ளார்.

 

தமிழக அரசு விருது, மத்திய அரசின் பதமஸ்ரீ விருதுகளை பெற்றிருக்கும் விவேக், திரைப்படங்கள் வாயிலாக மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லி வருவதன் மூலம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

 

59 வயதாகும் விவேக்கிற்கு அருள்செல்வி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் இருக்கிறார்கள்.