மதக்கூட்டங்கள் மனிதன் ஏற்படுத்திய பேரழிவுகள் - நடிகை குஷ்பு காட்டம்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகமே ஆட்டம் கண்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு மத சாயம் பூசப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற முஸ்லீம் கூட்டத்தில் பங்கேற்றவர்களால் தற்போது கொரோனா வேகமாக பரவ தொடங்கியிருப்பதாக பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
தமிழகம் கொரோனா தாக்கத்தின் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகத்திற்கு திரும்பிய சுமார் 1000 பேர்களுக்கு மேலானவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம், என்று அரசு சந்தேகித்திருப்பதோடு, டெல்லி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, சமூக வலைதளங்களில் முஸ்லீம் மக்களால் தான் கொரோனா வேகமாக பரவுகிறது, என்று சிலர் தகவல் வெளியிட்டு வருவதோடு, கொரோனா ஜிகாத் என்றும் குறிப்பிடுகிறார்கள். இது முஸ்லீம் மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்த சூழலில் மிகவும் பயமுறுத்தும் விஷயம் என்னவென்றால் சிலர் கொரோனா வைரஸை ஒரு சமூகப்பிரச்சினையாக மாற்றுகிறார்கள். இந்த வைரசுக்கு மதம் இல்லை, அது மதங்களைப் பார்ப்பதில்லை, கடவுளைக்கண்டும் அஞ்சுவதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே வாயை மூடிக்கொண்டு வீட்டில் இருக்கவும். எல்லா மதக்கூட்டங்களும், இந்தக் காலகட்டத்தில் மனிதன் உருவாக்கிய பேரழிவுகள். மீண்டும் சொல்கிறேன், கொரோனா வைரசுக்கு மதம் கிடையாது.” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.