விஜய் வழியை பின்பற்றும் வரலட்சுமி!

ஹீரோயின், வில்லி என எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் நடிகையாக வரலட்சுமி வலம் வருகிறார். தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்து வரும் வரலட்சுமியின் நடிப்பில் சுமார் அரை டஜன் படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில், நடிகர் விஜயின் வழியை பின்பற்றி வரலட்சுமி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதாவது, நடிகர் விஜய் தனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தை பிறப்பு மருத்துவமனைக்கு சென்று, அவர் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதியன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கம் மோதிரம் பரிசாக வழங்குவார். காரணம், நடிகர் விஜயும் எழும்பூர் அரசு மருத்துவமனையில் தான் பிறந்தார்.
தற்போது, நடிகை வரலட்சுமியும் நடிகர் விஜய் வழியில், சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தை பிறப்பு மருத்துவமமனையில் தனது பிறந்தநாளை கொண்டாடுவதோடு, அவர் பிறந்தநாளான இன்று (மார்ச் 2) எழும்பூர் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்குகிறார்.
ஆனால், நடிகை வரலட்சுமி எழும்பூர் அரசு மருத்துவமனையில் பிறக்கவில்லை. அவர் பெங்களூரில் பிறந்ததாக கூறப்படுகிறது.
அதே சமயம், விஜய் எழும்பூர் அரசு மருத்துவமனையில் தனது பிறந்தநாளை கொண்டாடுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிறது. காரணம், விஜய் வருகையால் ஊடகங்களின் வருகையும், ரசிகர்களின் வருகையும் அதிகரிப்பதால், பச்சிளம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் விடுத்த கோரிக்கையால், நடிகர் விஜய் எழும்பூர் மருத்துவமனையில் தனது பிறந்தநாளை கொண்டாடுவதை தவிர்த்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.