May 18, 2019 08:38 AM

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

குணச்சித்திர நடிகையாக பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பெண் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் வெற்றி வாகை சூடி தொடர்ந்து படங்கள் இயக்கி வருகிறார். அந்த வரிசையில், அவரது நான்காவது படமாக உருவாகியிருக்கிறது ‘ஹவுஸ் ஓனர்’.

 

பசங்க கிஷோர், லவ்லின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்டிருக்கும் இப்படத்தை மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர்.ராமகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணா சேகர் டி.எஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

 

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பல பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

 

இது குறித்து கூறிய லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், “இதுபோன்ற நிகழ்வுகள் உண்மையில் மிகவும் அரிதாகவே நடக்கின்றன. உண்மையில் பெரிய படங்களுக்கு தான் இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், வினியோகஸ்தர்கள் அவற்றுக்கு தான் முன்னுரிமை தருவார்கள். ஏஜிஎஸ் சினிமாஸ் எங்கள் 'ஹவுஸ் ஓனர்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருப்பது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிப்பது, பெரிய படங்களை ரிலீஸ் செய்வதற்கு பெயர் போன ஏஜிஎஸ், எங்களை போன்ற சிறிய பட்ஜெட்டில் உருவான படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டியிருப்பது உற்சாகத்தை அளிக்கிறது. இது எங்கள் குழுவினருக்கு மட்டும் கிடைத்த வெற்றி என்று நான் கூற விரும்பவில்லை, நல்ல கதைகளை கொண்ட படங்களுக்கு பெரிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது என்று தான் கூறுவேன். ஏஜிஎஸ் சினிமாஸ் படத்தின் வெளியீட்டுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருப்பதால், மிகப்பெரிய அளவில் படம் மக்களை சென்று சேரும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

 

House Owner

 

படம் மனித உறவுகளை பற்றி பேசுவதோடு, ஒரு அழகான காதல் கதையையும் கொண்டிருக்கிறது. எளிய மற்றும் யதார்த்தமான படமான இதை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நான் நம்புகிறேன்.” என்றார்.