Aug 29, 2025 05:28 AM

‘காந்தி கண்ணாடி’ மூலம் சிவகார்த்திகேயனுடன் மோதுகிறீர்களா ? - நடிகர் பாலா விளக்கம்

‘காந்தி கண்ணாடி’ மூலம் சிவகார்த்திகேயனுடன் மோதுகிறீர்களா ? - நடிகர் பாலா விளக்கம்

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமடைந்து, சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பலருக்கு உதவி செய்ததால், அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது. தற்போது தமிழகத்தின் பிரபலமானவர்களில் ஒருவராக திகழும் பாலா, ‘காந்தி கண்ணாடி’ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

 

‘ரணம்’ படத்தை இயக்கிய ஷெரிப் இயக்கியிருக்கும் இப்படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெய் கிரண் தயாரித்திருக்கிறார். விவேக் - மெர்வின் இசையமைக்க, பாலாஜி கே.ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார்.

 

பாலா நாயகனாக நடிக்க, நாயகியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார். இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சண மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நிகிலா சங்கர், ஜீவா சுப்பிரமணியன், அமுதவாணன், மனோஜ் பிரபு, மதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘காந்தி கண்ணாடி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஆகஸ்ட் 27 ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியன்று சென்னை, பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர்கள் கலந்து கொண்டு படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.  

 

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் பாலா, “காரைக்காலில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான் இன்று இங்கு நின்று பேசுகிறேன் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் அமுதவாணன் அண்ணன் தான். காரைக்கால் பாலாவாக இருந்த நான் காந்தி கண்ணாடி பாலாவாக உயர்வதற்கு, எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் என்னை அரவணித்து அழைத்து சென்ற அமுதவாணன் அண்ணனுக்கு என் நன்றி. என்னைப் பற்றி நல்ல செய்திகளாக வெளியிட்டு என் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் ஊடகத்தினருக்கும் நன்றி.

 

சினிமாவில் நான் சில படங்களில் நடித்திருக்கிறேன், ஆனால் நிறைய படங்களில் நான் நடித்தாலும், படம் வெளியாகும் போது அதில் இருக்க மாட்டேன். நடிகர்கள் பட்டியலில் என் பெயர் இருக்கும், தியேட்டருக்கு சென்று பார்த்தால் படத்தில் நான் இருக்க மாட்டேன். இதற்காக நான் அவர்களை தவறு சொல்ல மாட்டேன், பலவித காரணங்களுக்காக என் காட்சிகள் நீக்கப்பட்டிருக்கலாம். இப்படி தான் சினிமாவில் நான் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தேன். எனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம். அப்படிப்பட்ட என்னை ஹீரோவாக்கியிருக்கும் அண்ணன் ஷெரிப்புக்கும் நன்றி. அவர் பலரிடம் கதை சொல்வார், கதை பிடித்துவிடும், ஆனால் என்னை ஹீரோ என்றதும் தயாரிப்பாளர்கள் பின் வாங்கிவிடுவார்கள். ஆனால், தயாரிப்பாளர் ஜெய் கிரண் சார், நான் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். என் வீட்டில் எனக்காக ரூ.5 லட்சம் கூட ரெடி பண்ணி கொடுக்க மாட்டார்கள், அந்த அளவுக்கு தான் என் குடும்பம் மற்றும் சுற்றியிருப்பவர்கள் நிலை இருக்கிறது. ஆனால், என்னை நம்பி கோடிக்கணக்கான பணம் போட்டி தயாரிப்பாளர் சாருக்கு நன்றி. என்னுடன் நடிக்க பல நடிகைகள் மறுத்த நிலையில், என்னுடன் நடிக்க ஓகே சொன்ன நமிதா கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சணா மேடம், பாலாஜி சக்திவேல் சார் என அனைவரும் என் நன்றி. அவர்களால் தான் இந்த படம் பெரிய படமாக உருவெடுத்திருக்கிறது.” என்றார்.

 

சிவகார்த்திகேயனின் மதராஸி படம் வெளியாகும் போது உங்கள் படமும் வெளியாகிறதே, அவருடன் இப்படி நேருக்கு நேர் மோதுவது ஏன் ? என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகர் பாலா, “சிவகார்த்திகேயன் அண்ணன் எங்கே நான் எங்கே, அப்படி எல்லாம் இல்லை. காந்தி கண்ணாடி படத்தை வெளியிடுவதற்காக நாங்கள் ஒரு தேதியை முடிவு செய்தோம், ஆனால் அந்த தேதியில் சுமார் 6 திரைப்படங்கள் வெளியாகிறது. இதனால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் பேசி செப்டம்பர் 5 ஆம் தேதி முடிவு செய்திருக்கிறார்கள், இது எனக்கு தெரியாது. இயக்குநர் ஷெரிப் அண்ணன் தான் எனக்கு போன் பண்ணி விசயத்தை சொன்னார், அதை கேட்டதும் நான் அதிர்ச்சியாகி விட்டேன். அவரிடமே, இது எப்படி சரியாக வரும், என்று கேட்டேன். 

 

சிவகார்த்திகேயன் சார் பெரிய நடிகர், அவர் படத்திற்கு ஏகப்பட்ட பேர் வருவாங்க, ஆனால் அனைவரும் டிக்கெட் கிடைக்காது, அப்படி டிக்கெட் கிடைக்கதவர்கள் நம்ம படத்தை பார்ப்பார்கள், என்று இயக்குநர் காராணம் சொல்லி என்னை சமாதனப்படுத்தினார். இது தான் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாவதற்கு காரணம், மற்றபடி சிவா அண்ணனுடன் மோதுவதற்காக அல்ல.” என்றார்.

 

Actress Archana

 

தனுஷுக்கு அம்மாவாக நடித்த நீங்கள் இப்போது பாலாவுடன் நடித்திருக்கிறீர்கள், இருவருக்கும் இடையே எதாவது ஒற்றுமை இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் நடித்த நடிகை அர்ச்சணா, “இவங்க, அவங்கள போல் இருக்காங்க, என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஒவ்வொருவரும் அவங்களுடைய தனித்தன்மையோடு தான் இருக்கிறார்கள். அப்படி தன பாலாவும் தனித்தன்மையோடு நடித்திருக்கிறார். அவருடன் நடித்த பொழுது நான் பார்த்தது, கறும் திறன் நன்றாக இருக்கிறது. அவர் எந்த மாதிரியாக நடித்தாலும், அவரது நடிப்பில் வெகுளித்தனம் இருக்கிறது, அது நன்றாக இருக்கிறது. அவர் அவருக்கான கதைகளை தேர்வு செய்து நடித்தாலே நிச்சயம் நல்ல இடத்திற்கு செல்வார். எனவே, ஒருவருக்கு ஒருவரை ஒப்பீட்டு பார்க்க கூடாது, அதை நான் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.” என்றார்.