Dec 15, 2019 09:51 AM

ஆசியாவின் முதல் பெண்! - ராதிகா நிகழ்த்திய சாதனை

ஆசியாவின் முதல் பெண்! - ராதிகா நிகழ்த்திய சாதனை

1978 ஆம் ஆண்டு வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ராதிகா, 40 ஆண்டுகளை கடந்தும் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் அனைத்திலும் நடித்திருக்கும் ராதிகா, தொலைக்காட்சியிலும் தனக்கென்று தனி முத்திரையை பதித்திருக்கிறார்.

 

நடிகை, தயாரிப்பாளார் என்று தற்போதும் பிஸியாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை ராதிகா, ஆசிய அளவில் ஒரு விஷயத்தில் முதல் நடிகையாக புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

 

உலக அளவில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் டிவி நிகழ்ச்சி கோடீஸ்வரன் நிகழ்ச்சியாகும். ரூ.1 கோடி பரிசுத் தொகை கொண்ட இந்த நிகழ்ச்சி பல்வேறு தொலைக்காட்சிகளில் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

 

அந்த வகையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வித்தியாசமாக முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்துக் கொள்ளும் கோடீஸ்வர நிகழ்ச்சி ‘கோடீஸ்வரி’ என்ற தலைப்பில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகை ராதிகா தான் தொகுத்து வழங்குகிறார்.

 

உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை, பல பிரபலங்கள் தொகுத்து வழங்கி வரும் நிலையில், ஆசியாவில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் முதல் பெண் தொகுப்பாளர் என்ற பெருமையை நடிகை ராதிகா பெற்றிருக்கிறார்.

 

வரும் டிசம்பர் 23 ஆம் தேதி முதல் இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ள ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. 

 

Radhika in Kodiswari

 

இதில் கலந்துக் கொண்ட ராதிகா, "சீரியல், சினிமா என்று பிஸியாக இருந்தாலும், இதில் நான் பங்கேற்க முக்கிய காரணம், இது பெண்களுக்கான நிகழ்ச்சி என்பதால் தான். இந்த நிகழ்ச்சி குறித்து கலர்ஸ் தமிழ் பிஸினஸ் ஹெட் அனுப் கூறியபோதே எனக்கு பிடித்திருந்தது. எதைப் பற்றியும் யோசிக்காமல் ஓகே சொன்னேன். நடிப்பு என்பது வேறு, நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பது வேறு, இரண்டுக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கிறது. ஆனால், எதையும் செய்து பார்த்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை இருப்பதால், இதிலும் எனக்கான இடத்தை நான் தக்க வைத்துக் கொள்வேன்.

 

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமே பெண்களின் ஆசைகளை நிறைவேற்றுவது தான். பெண்கள் எப்போதும் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்வார்கள். கணவர், அப்பா, பிள்ளைகள் என்று மற்றவர்களின் ஆசைக்காகவும், அவர்களுக்காகவுமே வாழ்வார்கள். அப்படிப்பட்டவர்களின் தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றுவது இந்த நிகழ்ச்சியின் தனி சிறப்பு.

 

கோடீஸ்வர நிகழ்ச்சி என்றாலே நமக்கு அமிதாப் பச்சன் சார் தான் நினைவுக்கு வருவார். அவர் எனக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது மகிழ்ச்சி. அதேபோல், என்னை நிறைய பேர் கேட்பார்கள், யாரைப் போல வர விரும்புகிறீர்கள் என்று, பலர் சாவித்ரி போல வர வேண்டும், என்று சொல்வார்கள். அவர்களும் திறமையானவர்கள், அவர்களைப் போலவும் வர வேண்டும் தான். ஆனால், என்னை கேட்டால் நான் அமிதாப் பச்சன் போல வர வேண்டும், என்று தான் சொல்வேன். காரணம், வாழ்க்கையில் அவரைப் போல கீழே விழுந்து எழுந்தவரை நான் இதுவரை பார்த்ததில்லை. அப்படிப்பட்ட ஒருவரைப் போல தான் நான் வர வேண்டும் என்று நினைத்தேன். இன்று அவர் வழியில் இந்த கோடீஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.” என்றார்.