Dec 19, 2019 06:41 AM

5 மொழிகளில் வெளியாகும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’!

5 மொழிகளில் வெளியாகும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’!

கன்ன மொழியில் உருவாகியுள்ள ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ படம் கன்னடம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. ‘கே.ஜி.எப்’ படத்தை தொடர்ந்து பல மொழிகளில் வெளியாக உள்ள கன்னட திரைப்படமான இப்படத்தில் ரக்‌ஷித் ஷெட்டி ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹீரோயினாக ஷான்வி ஸ்ரீவட்சவ் நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலாஜி மனோகர், ப்ரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், அச்சுயுட்குமார், கோபகிருஷ்ண தேஷ்பாண்டே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவான ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பதோடு, கதை எழுதவது இயக்கம் என்று பல துறைகளில் பயணித்து வருகிறார். அந்த வகையில், சந்திரஜித் பெல்லியப்பா, அபிஜித் மகேஷ், அனிருத் கோட், நாகர்ஜுன் சர்மா, அபிலாஷ், சச்சின் ஆகியோருடன் சேர்ந்து ரக்‌ஷித் ஷெட்டின் இந்த கதையை எழுத, சச்சின் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். விஜயகுமார் தமிழ்ப் படத்திற்கான வசனம் எழுதியிருக்கிறார்.

 

காம் சவ்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பி.அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசையமைக்க, பாடல்களுக்கு பி.அஜனீஷ் லோக்நாத்துடன் இணைந்து சரண் ராஜ் இசையமைத்திருக்கிறார்.

 

தொலைந்து போன புதையலை தேடும் கொள்ளைக் கும்பலிடம் அமராவதி என்ற ஊர் மக்கள் சிக்கிக் கொள்ள, அந்த மக்களுக்கு கடவுள் போல அந்த ஊரை சார்ந்த போலீஸ் அதிகாரியான ஹீரோ ரக்‌ஷித் ஷெட்டி உதவி செய்கிறார். காமெடி கலந்த பேண்டஷி ஜானரில் உருவாகியுள்ள இப்படம் முழுக்க முழுக்க ஜாலியான ஒரு கமர்ஷியல் படமாக ரசிகர்களை கவரும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

வரும் ஜனவரி 3 ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் ஹீரோ ரக்‌ஷித் ஷெட்டி, ஹீரோயின் ஷான்வி ஸ்ரீவட்சவ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.

 

Avane Sriman Narayana Press Meet

 

நிகழ்ச்சியில் பேசிய ரக்‌ஷித் ஷெட்டி, ”என் நண்பர் ஒரு முறை என்னிடம், “ஏன் உன் படத்தை தமிழில் வெளியிட கூடாது” என்று கேட்டார். அதுவரை எனக்கு அந்த ஐடியா இல்லை. தமிழில் வெளியிட வேண்டும் என்றால், அந்த படம் சரியான படமாக இருக்க வேண்டும், என்று காத்துக் கொண்டிருந்தேன். தற்போது அதற்கான வாய்ப்பை அவனே ஸ்ரீமன் நாராயணா படம் கொடுத்திருக்கிறது. சிறு வயதிலேயே நான் அதிகமாக கே.பாலச்சந்தர் படங்களை பார்த்திருக்கிறேன். எனது அம்மாவுக்கு கே.பாலசந்தர் சாரின் படங்களும், நடிகர் கமல்ஹாசனின் படங்களும் ரொம்பவே பிடிக்கும். என் அம்மா மட்டும் அல்ல, எங்கள் ஊரில் பலர் பாலச்சந்தர் சார் படங்களுக்கு ரசிகர்களாக இருந்தார்கள். அப்போதே நான் யோசித்தேன், தமிழ்ப் படம் எப்படி உடுப்பி மக்களை கவர்கிறது, என்று. அப்போது தான் புரிந்தது நல்ல படங்களுக்கு மொழி முக்கியம் இல்லை என்பது. அப்படி ஒரு படமாகத்தான் இந்த அவனே ஸ்ரீமன் நாராயணா படம் இருக்கும்.” என்றார்.

 

ரக்‌ஷித் ஷெட்டிக்கு குரல் கொடுத்த பின்னணி குரல் கலைஞர் சேகர் பேசுகையில், “பாகுபலி படத்தின் பிரபாஷுக்கு குரல் கொடுத்த போது, இந்த படம் இந்திய சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று என் மனதில் பட்டது. அப்படி எண்ணம் தான் அவனே ஸ்ரீமன் நாராயணா படத்திற்கு டப்பிங் பேசும் போதும் தோன்றியது. இந்த படம் ஒரு ஜாலியான, ரசிகர்கள் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும். இதை என்னால் அழுத்தமாக சொல்ல முடியும்.” என்றார்.