Oct 08, 2021 07:05 PM

’பஹிரா’ படத்தின் ஆத்மா பிரபுதேவா தன் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

’பஹிரா’ படத்தின் ஆத்மா பிரபுதேவா தன் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், பிரபுதேவா பல மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் படம் ‘பகிரா’. சைக்கோ கில்லர் வகை பாணியிலான வித்தியாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அமீரா தஸ்தூர் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும், ரம்யா நம்பீசன், யாஷிகா ஆனந்த், ஜனனி ஐயர்,  சஞ்சிதா ஷெட்டி, சாக்‌ஷி அகர்வால், காயத்திரி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

அபிநந்தன் ராமனுஜம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்ய, கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் தேனாண்டாள் முரளி, தயாரிப்பாளர் தாணு, திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில், “கொரோனாவால் இரண்டு வருடம் யாரையும் சந்திக்கவில்லை. நாம் திரும்பி வரும்போது ஒரு வித்தியாசமான படைப்புடன் வரவேண்டும் என நினைத்தேன். இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் இவ்வளவு பிரமாண்டமாக இருக்க பரதன் பிலிம்ஸ் தான் காரணம். அவர்களுக்கு நன்றி. நான் உதவி இயக்குநராக இருக்கும் போது, சத்யம் தியேட்டரில் ஒரு ஆடியோ வெளியீட்டுக்கு வந்தேன், கூட்டத்தால் உள்ளே விடவில்லை, அப்போது என் படத்தின் அனைத்து விழாக்களும் இங்கு நடக்க வேண்டும் என முடிவு செய்தேன். இப்போது நடப்பது மகிழ்ச்சி. என் முதல் படத்தில் வேலை செய்த போதே, கணேசன் சேகரிடம் நான் பெரிய இயக்குநர் ஆனவுடன்  உன்னை இசையமைப்பாளராக ஆக்குவேன் என்றேன். அது இப்படத்தில் நடந்துள்ளது. இப்படத்தில் யாருமே நாயகிகள் இல்லை எல்லாருக்கும் முக்கியமான பாத்திரம் இருக்கிறது. நாயகி அமீரா தஸ்தூர் தமிழ் தெரியாவிட்டாலும் அருமையாக நடித்துள்ளார். என் வாழ்வின் வெற்றிக்கு காரணம் என் தந்தைதான். இந்தப்படம் உருவாக முழுக்காரணம் பிரபுதேவா மாஸ்டர் தான். இந்தப்படத்தின் ஆத்மா அவர் தான். நான் என்ன சொன்னாலும் யோசிக்காமல் ஒப்புக்கொண்டு செய்தார். என் மீது நம்பிக்கை வைத்த மாஸ்டருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. இப்படம் என்ன ஜானர் என்று எனக்கும் தெரியாது நீங்கள் பார்த்து விட்டு சொல்லுங்கள். எனக்கு முதன் முதலில் வாய்ப்பு தந்த ஜீ விக்கு நன்றி.” என்றார்.

 

நடிகர் பிரபுதேவா பேசுகையில், “என் மீது அன்பைத்தரும் தரும், எல்லாருக்கும் என் அன்பு. பரதன் பிலிம்ஸ் பற்றி சொல்ல வேண்டும், மேன்மக்கள் மேன்மக்களே என்பது  போல் அவ்ரகள் க்ரேட். ஒரு ஹெலிகாப்டர் கேட்டால் கூட முருகன் ஓகே சொல்லிவிடுவார், அப்படியான ஒருவர். சினிமாவுக்கு தேவையானவர். ஆதிக் என்னென்ன நினைத்தாரோ அதையெல்லாம் என்னை வைத்து பண்ணிவிட்டார். ஆதிக் ஒரு சிறந்த நடிகர். அவர் நடித்து காட்டுவது அட்டகாசமாக இருக்கும். இது என்ன ஜானர் என்று தெரியவில்லை என்றார்கள். இது ஆதிக் ஜானர் அவ்வளவு தான். இசை அற்புதமாக இருந்தது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். சாய்குமார் 1000 படம் செய்துள்ளார் கிரேட். ஜனனி நடிப்பதை பார்த்து பிரமிப்பாக இருந்தது. அடுத்து காயத்திரி பார்த்தாலும் அட்டகாசமாக நடித்தார். எல்லோருமே நன்றாக நடித்தார்கள். சோனியா அகர்வால் எனக்கு முன்பே தெரியும் அவருடன் லேடி கெட்டப்பில் நடித்துள்ளேன். அம்ரிதா தஸ்தூர் தமிழே தெரியாமல் மிரட்டலான நடிப்பை தந்துள்ளார். உங்கள் அனைவர் ஆசிர்வாதமும் எங்களுக்கு தேவை நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஆர்.வி.பரதன் பேசுகையில், “இங்கு வந்து எங்களை வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. இப்படத்திற்காக கடுமையாக உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் நன்றி. இந்தப்படத்தில் நேம் கார்டில் மட்டும் தான் என் பெயர் இருக்கிறது. ஆனால் அனைத்து வேலைகளையும் பார்த்தது என் அப்பா தான். தொடர்ந்து தமிழ் தயாரிப்பாளர்களுக்கு உதவி புரிந்து வரும் என் தந்தை RV அய்யாவுக்கு நன்றி. இந்தப்டம் கண்டிப்பாக நன்றாக வரும் எனும் நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

இசையமைப்பாளர் கணேசன் சேகர் பேசுகையில், “முதல் முறையாக இன்று விழா மேடை ஏறியுள்ளேன். இப்படத்தில் தயாரிப்பு தரப்பிலிருந்து முழு சுதந்திரம் கிடைத்தது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் இசையமைக்க முடிந்தது. ஆதிக் உடன் இணைந்து பணியாற்றியது மிக நல்ல அனுபவமாக, மகிழ்ச்சியாக இருந்தது. ஜி.வி.பிரகாஷிடம் தான் நான் வேலை பார்த்தேன். அவர் தான் ஆதிக் என்னை இசையமைப்பாளர் ஆக்குவார் என்றார். இப்போது அது உண்மையாகிவிட்டது. அவருக்கு நன்றிகள். எனது இசைக்குழுவினருக்கு நன்றிகள்.” என்றார்.