வெற்றிமாறன் படத்தில் பிக் பாஸ் பிரபலம்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் மக்களிடம் பிரபலமானதோடு, சினிமா வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்கள். இதுவரை நடைபெற்ற மூன்று சீசன்களுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, ஒவ்வொரு சீசனுக்குமான ரீச்சும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
அந்த வகையில், 2020 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 4 தொடங்க இருப்பதோடு, இதையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க வேண்டும், என்பதில் சேனல் நிர்வாகம் உறுதியாக உள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவரான சக்தி, இயக்குநர் வெற்றிமாறனின் புதிய படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பி.வாசுவின் மகனான சக்தி, 2007 ஆம் ஆண்டு வெளியான ‘தொட்டால் பூ மலரும்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெளியான ‘சிவலிங்கா’ மற்றும் ‘7 நாட்கள்’ ஆகிய படங்களில் நடித்த சக்தி, அதன் பிறகு பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றார்.
பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்ற ஆரவ், ஹரிஷ் கல்யாண், ஓவியா உள்ளிட்ட பலருக்கு பல வாய்ப்புகள் கிடைத்தாலும் சக்திக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் கிடைத்திருக்கும் வாய்ப்பு மூலம் அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.