Jun 16, 2020 09:11 AM

சினிமாத்துறைக்கு நிவாரணம் வழங்காத மத்திய அரசு - ஆர்.கே.செல்வமணி வருத்தம்

சினிமாத்துறைக்கு நிவாரணம் வழங்காத மத்திய அரசு - ஆர்.கே.செல்வமணி வருத்தம்

கொரோனா பாதிப்பில் இருந்து தொழில்துறைகள் மீண்டெழ ரூ.20 லட்சம் கோடி நிவாரணம் அறிவித்துள்ள மத்திய அரசு சினிமாத்துறைக்கு நிவாரணம் வழங்காதது வருத்தம் அளிக்கிறது, என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து பெப்சி சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அளவுக்கு அதிகமாகவும், வேகமாகவும் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த ஜூன் 19 அம தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ஜூன் 19 ஆம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள், திரைப்பட பின்னணி வேலைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு முழு வேகத்துடன் செயல்பட்டு வந்தாலும், பொது மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே அதனை கட்டுப்படுத்த இயலும். அதனால் தயவு செய்து தமிழக மக்கள் இந்த நோய் தொற்றை தடுக்க தமிழக அரசுக்கு ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலை உணர்ந்து திரைப்படத் தொழிலாளர்களையும் அவர்களோடு இணைத்து கருணையோடு நிவாரணம் அளித்த எங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

மேலும், மத்திய அரசுக்கு திரைப்படத் துறை மற்றும் திரைப்படத் தொழிலாளர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் நிவாரணம் வழங்குமாறு மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும், மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் முருகன் அவர்களுக்கும் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளோம்.

 

அதுபோன்ற கொரோனா பாதிப்பிலிருந்து தொழில்துறைகள் மீண்டும் மீண்டெழ ரூ.20 லட்ச கோடி ரூபாய் மத்திய அரசு நிவாரணமாக அறிவித்துள்ளது. அந்த 20 லட்ச கோடி ரூபாயில் எந்த நிதியும் இந்திய திரைப்பத்துறைக்கோ, இந்திய திரைப்படத் தொழிலாளர்களுக்கோ அறிவிக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிட விரும்புகிறோம்.

 

மாநில அரசு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளித்துள்ள நிலையில், மத்திய அரசு எவ்வித நிவாரணமும் அளிக்காதது வருத்தத்தை அளிக்கிறது. தயவு செய்து எங்கள் திரைப்படத் துறைக்கும் நிவாரணம் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.