Dec 31, 2025 06:05 AM

சூரியின் ‘மண்டாடி’ படத்தில் இருந்து இயக்குநர் விலகிவிட்டாரா ?

சூரியின் ‘மண்டாடி’ படத்தில் இருந்து இயக்குநர் விலகிவிட்டாரா ?

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், அவரது உறவினருமான மதிமாறன் புகழேந்தி ’செல்ஃபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தற்போது அவர் இயக்கத்தில், சூரி நாயகனாக நடிக்கும் படம் ‘மண்டாடி’. ராமேஸ்வரம் பகுதியில் நடைபெறும் மீன் பிடி படகு பந்தயப் போட்டியை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தை ஆர்.எ.ஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி நிறுவனம் சார்பில் இயக்குநர் வெற்றிமாறன் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

 

மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமான திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் இடம்பெறும் படகு பந்தய காட்சியை பல அதிநவீன கேமராக்கள் கொண்டு படமாக்குவதோடு, இப்படத்திற்காக நடிகர் சூரி அப்பகுதியில் சில மாதங்கள் தங்கி, படகு ஓட்டும் பயிற்சியையும் மேற்கொண்டதாக சொல்லப்பட்டது.

 

இந்த நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் படத்தின் இயக்குநர் பெயர் இடம் பெறாததோடு, வெற்றிமாறன் பெயரும், அவரது நிறுவனம் பெயரும் இடம் பெறவில்லை. அதே சமயம், படம் 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது, என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

 

படத்திற்காக சூரி தயாராவது, அவர் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாவது என்று படம் குறித்த தகவல்களை தெரிவித்திருக்கும் தயாரிப்பு தரப்பு இயக்குநர் பெயரை தொழில்நுட்ப குழு உள்ளிட்ட எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.