Mar 31, 2020 03:57 PM

சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பிரபலங்கள்!

சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பிரபலங்கள்!

கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் பல்வேறு துறையை சேர்ந்த தொழிலாளர்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். அந்த வகையில், திரைப்பட தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பெப்ஸி அமைப்பு மூலம் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என்று ஏராளமான சினிமா பிரபலங்கள் பணமாகவும், பொருளாகவும் உதவி செய்து வருகிறார்கள்.

 

சினிமா தொழிலாளர்கள் பாதிப்படைந்தது போல சினிமா பத்திரிகையாளர்களும் இந்த கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக நிறுவனம் சாராத, ப்ரீலான்ஸர் சினிமா நிருபர்கள், தனியாக யுடியுப் சேனல் மற்றும் இணையதள பத்திரிகைகள் நடத்தி வருபவர்கள், வார பத்திரிகைகள் நடத்துபவர்கள், மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் என ஏராளமானவர்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். இவர்களுக்கு உதவும் நோக்கில், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

 

அதன்படி, சினிமா பிரபலங்கள் பலரை சினிமா பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் அனுகிய நிலையில், தற்போது பலர் சினிமா பத்திரிகையாளர் சங்கம் வழியாக சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.

 

அதன்படி, பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு முதல் நபராக 1250 கிலோ அரிசி வழங்கினார். அதனை உடனடி தேவை உள்ள உறுப்பினர்களுக்கு சங்க நிர்வாகிகள் உடனடியாக பிரித்துக் கொடுத்ததோடு, மேலும் பல உறுப்பினர்களுக்கு அரிசி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிரார்கள்.

 

Thanu

 

அதேபோல், சினிமா பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வரும், நடிகர்கள் சிவகார்த்திகேயனும், கார்த்தி சிவகுமாரும் தலா ரூ.50 ஆயிரம் நிதி வழங்கியுள்ளார்கள். இந்த தொகையை அவர்கள் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்கள்.

 

Sivakarthikeyan and Karthi

 

மேலும், ஒளிப்பதிவாளரும், தயாரிப்பாளரும், முன்னாள் பெப்ஸி செயலாளருமான சிவா, விஜய் ஆண்டனியை வைத்து தான் தயாரித்திருக்கும் ‘தமிழரசன்’ திரைப்படம் முழுவதுமாக முடிவடைந்தும் கொரோனா பாதிப்பால் ரிலீஸ் ஆக முடியாத சூழல் ஏற்பட்டாலும், அதை பொருட்படுத்தாமல், பத்திரிகையாளர்களின் நிலையை அறிந்து, உடனடியாக ரூ.1,37,000 மதிப்புள்ள அத்தியாவசிய மளிகை பொருட்களை சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு வழங்கியுள்ளார்.

 

FEFSI Siva

 

இவர்களைப் போல, கவிஞர், நடிகர், இயக்குநர் என்று பன்முகத் திறன் கொண்ட இ.வி.கணேஷ்பாபு, 150 கிலோ சமையல் எண்ணெய்யை சங்கத்திற்கு நிவாரண பொருளாக வழங்கியுள்ளார். இவர் தற்போது ‘கட்டில்’ என்ற படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Babu Ganesh

 

மேலும், நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி, மற்றொரு பிரபல ஒளிப்பதிவாளரும், ’அசுரன்’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து பாராட்டு பெற்று வருபவருமான வேல்ராஜ் ஆகியோர் தலா ரூ.10 ஆயிரம் நிதியாக வழங்கியிருக்கிறார்கள்.

 

இப்படி, தக்க நேரத்தில் சினிமா பத்திரிகையாளர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வழங்கியிருக்கும் இவர்களுக்கும், வழங்க இருப்பவர்களுக்கும் ஒட்டு மொத்த உறுப்பினர்கள் சார்பில், நன்றி தெரிவித்திருக்கும் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம், இதுவரை பெற்றிருக்கும் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண நிதியையும், இனி பெறப்போவதையும், தேசிய ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு, சங்க உறுப்பினர்களுக்கு விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது.