Jul 27, 2021 12:56 PM

ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கு! - நடிகர் விஜய்க்கு நீதிபதிகள் போட்ட புதிய உத்தரவு

ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கு! - நடிகர் விஜய்க்கு நீதிபதிகள் போட்ட புதிய உத்தரவு

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற சொகுசு ஆடம்பர காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டது. ஆனால், அந்த வரிக்கு தடை விதிக்க கோரி நடிகர் விஜய், தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த வழக்கு ஜூலை 13 ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். அபராத தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண திக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

 

மேலும், வரிக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாயப் பங்களிப்பு. சமூகத்துக்குப் பாடுபடுவதாகக் காட்டிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது, என்று விமர்சித்தார்.

 

இந்த தீர்ப்புக்கு எதிராக விஜய் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், வரி செலுத்தத் தயாராக உள்ளதாகவும், வரிச்சலுகையை மட்டுமே எதிர்ப்பார்க்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

மேலும், நடிகர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது. நடிகர் என்பதால் தனக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை நாடியதற்காக தனக்கு விதிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் அபராதத்தை நீக்க வேண்டும். வணிக வரித்துறை விதிக்கும் வரியை ஒரு வாரத்தில் செலுத்தத் தயாராக இருக்கிறோம், என்று விஜய் தரப்பு வாதிட்டது.

 

இந்த நிலையில், நடிகர் விஜய் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், ஒரு இலட்சம் ரூபாய் அபாரத்திற்கும் தடை விதித்தனர். 

 

மேலும், ஏற்கெனவே செலுத்திய நுழைவு வரி 20 சதவீதம் போக, எஞ்சியுள்ள 80 சதவீதம் நுழைவு வரியை, நடிகர் விஜய் ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும், என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.