May 10, 2019 10:48 AM

சூப்பர் ஹீரோவான ஜெய்யுடன் மோதும் சூப்பர் வில்லன்கள்!

சூப்பர் ஹீரோவான ஜெய்யுடன் மோதும் சூப்பர் வில்லன்கள்!

'பிரேக்கிங் நியூஸ்' படத்தில் ஜெய் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் என்ற அறிவிப்புகள் வெளியான நாளில் இருந்தே அவர் யாருடன் மோதுவார் என்பதை அறியும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வரும் இந்த வேளையில் ராகுல் தேவ் (அஜித்குமாரின் வேதாளம் புகழ்) மற்றும் தேவ் கில் (மகதீரா மற்றும் விஜயின் சுறா புகழ்) ஆகியோர் இந்த படத்தில் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது படக்குழு. 

 

"நிச்சயமாக, சூப்பர் ஹீரோவுக்கு இணையாக சக்திவாய்ந்த சூப்பர் வில்லன்கள் இருக்கும் போது மட்டுமே மோதலின் தீவிரம் மிகவும் கடுமையானதாக இருக்கும். நடிகர் ஜெய்யை நாயகனாக நடிக்க முடிவெடுத்த போதே, எங்கள் அடுத்த வேலை, தோற்கடிக்க முடியாத ஒரு வில்லனை தேடும் படலத்தில் தொடர்ந்தது. நிறைய விஷயங்களை மனதில் வைத்து வில்லனை தேடியபோது, ராகுல் தேவ் மற்றும் தேவ் கில் ஆகியோரை நடிக்க வைக்க முடிவெடுத்தோம். எனெனில் அவர்களது உடற்கட்டும், அவர்களின் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை. அத்தகைய நடிகர்களை கதை கோரியது. இந்த இருவருமே படத்திற்கு முழுமையான பொருந்துவார்கள் என உணர்ந்தோம். மேலும், அவர்கள் இருவருக்கும் சில முக்கியமான ஒற்றுமைகள் உண்டு. இருவருமே சினிமா அர்ப்பணிப்பு உடையவர்கள், வில்லனாக நடித்தாலும் அகில இந்திய அளவில் பிரபலமானவர்கள். இந்த படத்தில் இருவரும் சகோதரர்களாக நடிக்கிறார்கள், ராகுல் தேவ் ஒரு சக்தி வாய்ந்த சர்வதேச தாதாவாக நடிக்கிறார். ஒரு சாதாரண மனிதர் தன்னுடைய மக்களின் நலனுக்காக சூப்பர் சக்திகளை வைத்து எப்படி போராடுகிறார் என்பது தான் கதை" என்றார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன். இவர் அந்நியன், முதல்வன் உட்பட 90க்கும் மேற்பட்ட படங்களுக்கு VFX மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Actor Raghul Dev and Dev Gill

 

இந்த படத்தில் வி.தினேஷ்குமார் மேற்பார்வையின் கீழ் உலகெங்கிலும் உள்ள 450 சி.ஜி.தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தத் திரைப்படத்தில் காட்சிகளில் பிரமாண்டம் மட்டுமல்லாமல், உணர்வுகள் மற்றும் காதல் ஆகியவற்றையும் காட்ட இருக்கிறோம் என்கிறார் இயக்குனர்.

 

ஜெய் மற்றும் பானுஸ்ரீ முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை நாகர்கோவில் சார்ந்த திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பை கையாள்கிறார். விஷால் பீட்டர் இசையமைக்க, மகேஷ் கலை இயக்குனராகவும், ராதிகா நடன இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள்.