இயக்குநர் பாலா படத்தில் மீண்டும் துருவ்!

பாலாவின் ‘சேது’ விக்ரமின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியதோடு, அவரது ‘பிதாமகன்’ படம் மூலம் தான் தேசிய விருதும் பெற்றார். விக்ரமின் வெற்றியிலும், முன்னேற்றத்திலும் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய இடம் இருப்பதைப் போல் அவரது மகன் துருவ் வாழ்க்கையிலும் அது இருக்க வேண்டும், என்பதால் தான் துருவ் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்தை பாலா இயக்க வேண்டும் என்று விக்ரம் விரும்பினார்.
அதன்படி, தெலுங்கில் வெற்றிப் பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்கான ‘வர்மா’-வை பாலா ரீமேக் செய்தார். படம் முடிவடைந்த நிலையில், சில பிரச்சினைகளால் அப்படத்தை தயாரிப்பாளர் வெளியிட மறுத்ததோடு, முதலில் இருந்து வேறு ஒரு இயக்குநரை வைத்து எடுக்க இருப்பதாகவும் அறிவித்தார். இது பாலாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதோடு, இந்த விஷயம் தொடர்பாக விக்ரமும் அவருக்கு சப்போர்ட் செய்யவில்லை.
இதற்கிடையே, வேறு ஒரு இயக்குநரின் இயக்கத்தில் துருவ் நடித்த ‘ஆதித்ய வர்மா’ வெளியாக அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாமல் போய்விட்டது.
இந்த நிலையில், ‘ஆதித்ய வர்மா’ படத்தை காட்டிலும் பாலா இயக்கிய ‘வர்மா’ சிறப்பாகவே இருந்ததாக அப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும், பாலாவின் சேது படத்தை தான் அர்ஜுன் ரெட்டி என்று எடுத்தார்கள். அதே அர்ஜுன் ரெட்டியை தான் பாலா மேம்படுத்தப்பட்ட சேதுவாக எடுத்தார். சொல்லப்போனால் சேது விக்ரமின் அப்டேட் வெர்சன் தான் வர்மா, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஒளிப்பதிவாளர் சுகுமார், ”ஆதித்ய வர்மா படத்தில் துருவின் நடிப்பை வெகுவாக பாராட்ட பாலா தான் காரணம். அவர் கொடுத்த பயிற்சியும், வாங்கிய வேலையும் தான் துருவை அப்படி நடிக்க வைத்திருக்கிறது. துருவ் சிறந்த நடிகராக வருவார், என்று அப்போதே பாலா கூறினார். மற்ற நடிகர்களிடம் இல்லாத தனி சிறப்பு துருவிடம் இருக்கிறது. அவர் தமிழ் பேசினால் தமிழ் நடிகராக தெரிவார். அதே சமயம், ஆங்கிலம் பேசினால் ஏதோ ஹாலிவுட் நடிகர் போல அவரது முகம் மாறிவிடும். இப்படி ஒரு சிறப்பு மிக்க துருவை ஒரு சிறந்த நடிகராக்க பாலா பெரிதும் உழைத்தார்.
ரீமேக் படம் என்பதால் பாலாவால் சிறப்பாக செய்யமுடியவில்லை அல்லது சிட்டி சப்ஜெக்ட் என்பதால் அவரால் அதை கையாள முடியவில்லை என்று சிலர் கூறுவதெல்லாம் முட்டாள்தனத்தின் உச்சம். இனி வரும் காலங்களில் இயக்குநர் பாலாவும், நடிகர் துருவும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வர்மா பிரச்சினையால் விக்ரம் மற்றும் பாலாவுக்கு இடையே எந்தவித பிரிவும் ஏற்படவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.