Jan 11, 2020 05:54 AM

’தர்பார்’ படத்தில் வசனம் நீக்கம்! - கமல்ஹாசன் கருத்து

’தர்பார்’ படத்தில் வசனம் நீக்கம்! - கமல்ஹாசன் கருத்து

ரஜினியின் ‘தர்பார்’ நேற்று முன் தினம் உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. முருகதாஸ் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியிருப்பதோடு, உலக முழுவதும் ஒரே நாளில் சுமார் ரூ.113 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, ’தர்பார்’ படத்தில் பணம் இருந்தால் சிறைக் கைதிகள் ஷாப்பிங் கூட செல்லலாம், என்ற வசனம் இடம்பெற்றிருப்பதோடு, தென்னிந்தியாவில் இப்படி ஒரு கைதி அடிக்கடி சிறையில் இருந்து வெளியே போகிறாராமே, என்ற வசனமும் இடம்பெற்றிருக்கிறது. 

 

இந்த வசனம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை குறிப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவரது வழக்கறிஞர், குறிப்பிட்ட அந்த வசனத்தை நீக்கவில்லை என்றால், ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்வோம், என்று கூறியிருக்கிறார். 

 

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் லைகா நிறுவனம், “எங்களின் ‘தர்பார்’ திரைப்படத்தில், கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதைக் குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ, அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல. இருப்பினும் அந்தக் குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதைப் புண்படுத்துவதாகத் தெரிய வந்ததால், அதைப் படத்திலிருந்து நீக்குகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசனிடம், தர்பார் வசனம் விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ”’பராசக்தி’ காலத்தில் இருந்தே கருத்துரிமை பிரச்சினை உள்ளது, ’தர்பார்’ படத்தில் சர்ச்சை வசனம் நீக்கப்படுவதும் ஒரு ஷாப்பிங் தான்.” என்று தெரிவித்துள்ளார்.