Dec 12, 2019 06:41 AM

தமிழ் சினிமாவின் அடையாளம் சேரனுக்கு இன்று அகவை 50!

தமிழ் சினிமாவின் அடையாளம் சேரனுக்கு இன்று அகவை 50!

தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் ஜாம்பவான்களில் ஒருவரான இயக்குநரும், நடிகருமான சேரன் இன்று தனது 50 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

 

1997 ஆம் ஆண்டு வெளியான ‘பாரதி கண்ணம்மா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சேரன், தனது முதல் படத்தையே சமூக அக்கறையோடு எடுத்து, தமிழ் சினிமாவை மட்டும் இன்றி ஒட்டு மொத்த தமிழகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பினார். பார்த்திபன், மீனா நடித்த அப்படம் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தமிழகத்திலும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

 

‘பாரதி கண்ணம்மா’ படத்தின் மூலம் சாதி வெறி பிடித்தவர்களை யோசிக்க வைத்த சேரன், தனது இரண்டாவது படமான ‘பொற்காலம்’ படத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் மனக்குமறல்களை சத்தமாக ஒலிக்கச் செய்ததோடு, மற்றவர்களையும் யோசிக்க செய்தவர், ஹீரோ என்பவரை ஒரு கதாபாத்திரமாக்கி, அதை மக்களையும் ஏற்றுக்கொள்ள செய்தார்.

 

இப்படி தொடர்ந்து சமூகத்திற்கான படைப்புகளாக கொடுத்து வந்த சேரன், ‘தவமாய் தவமிருந்து’ படம் மூலம் குடும்ப உறவுகளின் வலிமையையும், பெற்றோர்களின் துயரங்களையும் வெளிக்காட்டி கண்கலங்க வைத்தவர், பெற்றோர்களை மறந்த பிள்ளைகளின் மனதில் தீரா வலியை ஏற்படுத்தினார்.

 

இயக்குநராக தொடர் வெற்றிகளை கொடுத்தவர், ஹீரோவாக ‘ஆட்டோகிராஃப்’ மூலம் மாபெரும் வெற்றி கொடுத்தார். தற்போதும் தொடர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் நடிகராகவும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

 

பல வெற்றிகளைப் பார்த்தவர், சில தோல்விகளை எதிர்கொண்டாலும், துவண்டு விடாமல் தற்போதும் நடிகராகவும், இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் சேரனை, தமிழ் சினிமாவின் அடையாளம் என்று சொன்னால் அது மிகையாகாது. 

 

இன்று தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடும் சேரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிப்பதோடு, அவர் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ராஜாவுக்கு செக்’ படத்திற்கும், விரைவில் விஜய் சேதுபதியை வைத்து இயக்க இருக்கும் படத்திற்கும் வாழ்த்துகள் தெரிவிப்போம்.