இயக்குநர் அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

‘தடம்’, ‘செக்கச் சிவந்த வானம்’ என்று தொடர் வெற்றிகளைக் கொடுத்து வரும் அருண் விஜய், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனால், அவரது அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களில் பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ளது.
அந்த வகையில், ‘குற்றம் 23’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் அறிவழகன் - அருண் விஜய் இரண்டாவது முறையாக இணைந்திருப்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை, ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா அதிகமானப் பொருட்ச் செலவில் மிக பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக ரெஜினா கசண்டரா நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக ஸ்டெபில் பட்டேல் நடிக்கிறார். பகவதி பெருமாள் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.
ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமாக உருவாகும் இப்படம் இயக்குநர் அறிவழகன் இயக்கிய படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமாகும். அதேபோல், தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இப்படம், அறிவழகன் இதுவரை இயக்கிய படங்களைக் காட்டிலும் அதிகமான ஆக்ஷன் காட்சிகளை கொண்ட படமாகவும் இருக்குமாம்.
பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சக்தி வெங்கட்ராஜ் கலைப் பணியை மேற்கொள்ள, வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார். ரெட் டாட் பவன் பப்ளிசிட்டி டிசைன் பணியை கவனிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜயகுமார் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.