Feb 25, 2020 07:19 AM

சிபிராஜ் படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர்!

சிபிராஜ் படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர்!

கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் (Creative Entertainers and Distributors) சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடிக்க, நந்திதா ஸ்வேதா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் சுமன் ரங்கநாதன் நடிக்கிறார்.

 

இந்த நிலையில், இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். படத்தின் மிக முக்கியமான வேடத்தில் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

இது குறித்து தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் கூறுகையில், ’கபடதாரி’ எங்கள் அனைவரின்  மனதிற்கும் மிக நெருக்கமான படைப்பு. இப்படத்தின் கதை பற்றி அறிந்த கணத்திலிருந்தே படத்தின் மீது பெரும் ஈர்ப்பு உண்டாகிவிட்டது. இந்தப்படத்தில் நாங்கள் பங்கு கொண்ட கணத்திலிருந்தே இப்படைப்பு அனைவரிடத்திலும் மிகப்பெரும் உற்சாகத்தை அள்ளித்தெளித்துள்ளது. படத்தில் நடித்து வரும் அனைவருமே தங்கள் முழுத்திறமையையும் கொட்டி தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளார்கள். இக்கதையில் ஒரு குறிப்பிட்ட கதாப்பாத்திரத்திற்கு நல்ல உடல்கட்டுடன், ஸ்டைலீஷ் லுக்கில் இருக்கக்கூடிய நடிகர் தேவைப்பட்டார். படக்குழுவுடன் இணைந்து  பலரை மனதில் கொண்டு,  யாரை நடிக்க வைக்கலாம் என விவாதித்தோம். இறுதியாக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்தக்கதாப்பாத்திரத்தை அருமையாக கையாள்வார் என எனக்கு தோன்றியது. ஆனால் அவர் அரிதாரம் பூச சம்மதிக்கவில்லை. பெரும் வற்புறுத்தலுக்கு பின் எங்கள் மீதான அன்பில் அவர் ஒத்துக்கொண்டார். அவருடைய கதாப்பாத்திரம் கதையை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் மிக முக்கிய பாத்திரம் ஆகும். படத்தில் மிக அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக  அந்த கதாப்பாத்திரம் இருக்கும். இப்படத்திற்கு பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வருவார் என எனக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

 

Pradeep Krishnamoorthy

 

சைமன் கே.கிங் இசையமைக்கும் இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்ய, விதேஷ் கலையை நிர்மாணிக்கிறார். எம்.ஹேமந்த் ராவ் கதையில், தழுவல் திரைக்கதை, வசனத்தை ஜான் மகேந்திரன், தனஞ்செயன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளார்கள்.

 

தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் ‘கபடதாரி’ வரும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.