Mar 04, 2019 12:52 PM

ரஜினி சொன்னதை ‘பூமராங்’ படம் மூலம் செய்து காட்டிய இயக்குநர் கண்ணன்!

ரஜினி சொன்னதை ‘பூமராங்’ படம் மூலம் செய்து காட்டிய இயக்குநர் கண்ணன்!

’இவன் தந்திரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பூமராங்’. வரும் மார்ச் 8 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு காரணம், இப்படத்தின் கண்டண்ட்.

 

தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நதிநீர் இணைப்பின் அவசியம் குறித்து அறிஞர்கள் அறிவுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அதற்கான முயற்சியை இதுவரை எந்த அரசாங்கமும் மேற்கொள்ளவில்லை என்பது ஒரு புறக் இருக்க, பல விஷயங்களை மக்களிடம் சேர்க்கும் சினிமாவும் கூட அது குறித்து இதுவரை எந்தவிதமான செய்தியையும் மக்களிடம் சேர்க்கவில்லை.

 

இந்த நிலையில், நதிநீர் இணைப்பு குறித்து படமாக உருவாகியுள்ள ‘பூமராங்’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானதோடு, அப்படத்தில் இடம்பெற்ற நதிநீர் இணைப்புக் காட்சி மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பல ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் நதிநீர் இணைப்பை சத்தியமாக்கினால் அதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். ஆனால், அதன் பிறகு அது குறித்து அவரோ சரி அரசோ சரி பேசவில்லை.

 

ரஜினி வாயால் சொன்னதை இப்போது தன் படத்தின் முக்கிய கருவாக எடுத்துக் கொண்டு அதை ‘பூமராங்’ படம் மூலம் செய்து காட்டியிருக்கும் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர்.கண்ணன், நதிநீர் இணைப்பு என்பதை வசனத்தின் மூலம் மட்டும் பேசாமல், அதற்காக ஒரு கோடி ரூபாய் செலவில் நிஜமான கால்வாய் ஒன்றை வெட்டியுள்ளார். 

 

படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த காட்சி குறித்து இயக்குநர் கண்ணன் கூறுகையில், ”படத்தின் முக்கியமான காட்சி இது. நீர்த்தேவை பற்றிப் பேசுகிற படமாக பூமராங் ஆனதால் இதற்காக இந்தக் காட்சி அவசியமாகிறது. இன்றைய சினிமாவுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு செட் போட்டு பாடல் எடுப்பதன் அநாவசியத்தை விட கதைக்குத் தேவையாக சமூகத்துக்கு நல்ல செய்தி நோக்கத்துக்காக செலவு செய்வதையே என் போன்ற இயக்குநர்கள் விரும்புகிறோம். அதையேதான் இன்றைய ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

 

குறிப்பாக படித்த இளைஞர்கள் ஒரு சமுதாய மாற்றத்தை எதிர்நோக்கியிருப்பதால் இப்படியான காட்சிகள் எடுப்பதும், அறிவார்ந்த செய்திகள் சொல்வதும் அவசியமாகிறது.

 

Boomerang

 

இந்தக் காட்சிக்காக ஒரு கிராமத்தையே வளைத்து முறையான அனுமதிகள் வாங்கி அங்கிருப்பவர்கள் உதவியுடன் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வைத்து ஒரு மாத முயற்சியில் இந்தக் கால்வாயை வெட்டினோம். இதற்கான செலவு மட்டும் ஒரு கோடியானது.

 

இன்றைய கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் இதை உருவாக்கி வைத்துவிட முடியுமென்றாலும் அதில் இறங்கி வேலை செய்வதையோ, அதற்குள் ஆட்கள் இயங்குவதையோ நேர்த்தியாகச் செய்ய முடியாது. அது ரசிகனை ஏமாற்றுவது போலாகும் என்பதால் இந்த அளவு முயன்றோம். டிரைலருக்கான விமர்சனங்களில் இந்தக் காட்சி பரவலான பராட்டுகளைப் பெற்று வருகிறது. படத்தில் பாருங்கள் இதன் முக்கியத்துவத்தை.” என்றார்.

 

நதிநீர் பிரச்சினையை பேசுவதோடு நின்றுவிடாமல், அதற்கான தீர்வை சொல்வதோடு, அதை தனது செய்தும் காட்டியிருக்கும் ஆர்.கண்ணனின் ‘பூமராங்’ மக்களிடம் மட்டும் இன்றி அரசியல்வாதிகளிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.