’மை டியர் டால்’ திரைப்பட விமர்சனம்
Casting : VJ Pappu, Anupama, KPY Rajavelu, Sudha, Thara, Keerthana, Asha, Rajamani, Baby Deekshitha, Dominic
Directed By : A.Aravinth Raj
Music By : M.Fazil
Produced By : R.M.Jayaramachandran
நாயகன் விஜே பப்பு, தனது அலுவலகத்தில் பணியாற்றும் நாயகி அனுபமாவை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், அனுபமா அதே அலுவலகத்தில் பணியாற்றும் மற்றொரு நபரை காதலிக்கிறார். இந்த விசயம் தெரிந்த உடன் அந்த பணியை விட்டு விட்டு, வேறு ஒரு நிறுவனத்தில் விஜே பப்பு பணிக்கு சேருகிறார். சில வருடங்களுக்குப் பிறகு திருமணத்திற்காக பெண் பார்க்கும் பப்புவுக்கு, அவர் காதலித்த அனுபமாவின் புகைப்படத்தை காட்டுகிறார்கள். மகிழ்ச்சியில் திக்கு முக்காடி, ஓகே சொல்பவர், ”மனதில் நின்ற காதலி மனைவியாக வந்தால் வாழ்க்கை இன்ப வரமாகும்”, என்ற எண்ணத்தில் பெண் பார்க்க செல்கிறார்.
ஆனால், அந்த பெண் பார்க்கும் நிகழ்வுக்குப் பிறகு விஜே பப்புவின் வாழ்க்கையில் எதிர்பார்க்காத மாற்றங்கள் நிகழ்கிறது. அந்த மாற்றங்களும், அனுபமா மீதான அவரது காதலும் அவரது வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அவை என்ன ?, அதில் இருந்து விஜே பப்பு மீண்டாரா ?, அவருக்கு அனுபமாவின் காதல் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
விஜே பப்பு, காதல் நாயகனாக தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார். அவ்வபோது தனது வழக்கமான நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்தாலும், அது எடுபடவில்லை. காதல் வலியை வெளிக்காட்ட கண்ணீர் விட்டு கதறி நடித்திருப்பவர், சில இடங்களில் பொம்மையை காதலியாக நினைத்து வாழ்வது, என்று தனது மொத்த வித்தையையும் வெளிக்காட்டி, தன்னை ஒரு நடிகர் என்பதை நிரூபிக்க கடுமையாக உழைத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை அனுபமா, ஒப்பனை இல்லாத இயல்பான அழகியாக கவனம் ஈர்ப்பதோடு, கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் கேபிஒய் ராஜவேலு, அவரது மனைவியாக நடித்திருக்கும் சுதா, நாயகியின் தோழியாக நடித்திருக்கும் தாரா, நாயகனின் அலுவலக தோழியாக நடித்திருக்கும் கீர்த்தனா, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஆஷா, அப்பாவாக நடித்திருக்கும் ராஜாமணி, பேபி தீக்ஷிதா, நாயகியின் முன்னாள் காதலராக நடித்திருக்கும் டொமினிக் ஆகியோர் புதுமுகங்களாக இருந்தாலும், கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக பயணித்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.சேகர், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பயணிக்கும் திரைக்கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாகி படத்தின் தரத்தை அதிகரிக்க பெரிதும் உதவியிருக்கிறார்.
எம்.பாசிலின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதையில் இருக்கும் காதல் உணர்வுகளுக்கு உயிரூட்டும் விதத்தில் பயணித்திருக்கிறது.
எளிமையான திரைக்கதை என்றாலும், தனது படத்தொகுப்பு மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கிறார் எம்.பாசில்.
உயிரற்ற பொம்மையை பின்னணியாக வைத்துக்கொண்டு, உயிரில் கலந்த காதலியின் பிரிவையும், அது தரும் வலியையும் பார்வையாளர்களின் இதயங்களில் கடத்த முயற்சித்திருக்கும் இயக்குநர் ஏ.அரவிந்த் ராஜ், அதற்கான திரைக்கதையை எளிமையாக கையாண்டிருந்தாலும், அதை சுவாரஸ்யமாக சொல்ல அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்.
கதை சொல்லல், மேக்கிங் ஆகியவற்றில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், அவை அனைத்தும் பொருளாதார ரீதியானது மட்டுமே என்பது திரையில் தெரிகிறது. அதை தவிர்த்துவிட்டு பார்த்தால், இது நிச்சயம் கவனம் ஈர்க்கும் காதல் படம்.
தனக்கான ஒரு எல்லை வகுகக்கப்பட்டிருந்தாலும், அதற்குள் பயணிக்கும் ஒரு காதல் கதைக்கான திரைக்கதையை சாமர்த்தியமாக எழுதியிருக்கும் இயக்குநர் ஏ.அரவிந்த் ராஜ், புதுமுக நடிகர், நடிகைகளை வைத்துக் கொண்டு, காதல் உணர்வுகளை பார்வையாளர்கள் மனதில் கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ‘மை டியர் டால்’ காதல் வலி.
ரேட்டிங் 3/5

