Dec 15, 2019 05:14 AM

மீண்டும் ஒரு புதிய முயற்சியில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

மீண்டும் ஒரு புதிய முயற்சியில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

’பீட்சா’ மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ், தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக திகழ்வதோடு, குறும்பட இயக்குநர்களாலும் திரைப்பட இயக்குநர்களாக வெற்றி பெற முடியும், என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கி வருவதோடு, தனது சொந்த தயாரிப்பில் திரைப்படங்களை தயாரித்து வரும் கார்த்திக் சுப்புராஜ், பல்வேறு புதிய முயற்சிகளிலும் அவ்வபோது ஈடுபட்டு வருகிறார்.

 

ஸ்டோன் பென்ஞ் (STONE BENCH) என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ், அந்நிறுவனம் மூலம் குறும்படங்களை திரையரங்குகளில் வெளியிட்டு, குறும்படங்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தார். ’கள்ளச்சிரிப்பு’ என்ற வெப் சீரிஸை தயாரித்தவர், ‘மேயாதா மான்’, ‘மெர்க்குரி’ ஆகிய திரைப்படங்களை தயாரித்தார். இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, தற்போது கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘பென்குயின்’ உள்ளிட்ட சில திரைப்படங்களை தனது ஸ்டோன் பென்ஞ் நிறுவனம் மூலம் தயாரித்து வரும் கார்த்திக் சுப்புராஜ், இண்டிபெண்டெண்ட் பிலிம் மேக்கர்களின் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

பல்வேறு துறைகளில் இருக்கும் பலர் சினிமாத் துறையின் மீது ஆர்வம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எந்தவித பின்புலமும் இன்றி, தங்களது சொந்த முயற்சியில் படங்களை தயாரித்து வருகிறார்கள். அப்படி உருவாகும் பல படங்கள், முழுநீளத் திரைப்படங்களுக்கு சவால் விடும் வகையில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் வெல்கின்றன. ஆனால், அந்த படங்கள் மக்களிடம் சென்று சேர்வது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகிவிடுவதோடு, விருது திரைப்படம் என்ற ஒரு வட்டத்திற்குள் முடங்கிவிடுகிறது.

 

இப்படிப்பட்ட படங்களில் நல்ல படங்களை அடையாளம் கண்டு, அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அதற்காக ’ஸ்டோன் பென்ஞ் இண்டி’ (STONE BENCH INDIE) என்ற தனி நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இந்நிறுவனத்தின் மூலம் இண்டிபெண்டெண்ட் திரைப்படங்களை தயாரிப்பது மற்றும் வெளியிடும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்.

 

அந்த வகையில், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ஞ் இண்டி நிறுவனத்தின் முதல் வெளீயீடாக ‘அல்லி’ என்ற படம் வெளியாகிறது.

 

Alli

 

சணல்குமார்  சசிதரன் இயக்கியிருக்கும் ‘அல்லி’ படத்தின் திரைக்கதையை கே.வி.மணிகண்டன், சணல்குமார் சசிதரன் இணைந்து எழுதியிருக்கிறார்கள். தேசிய விருது பெற்ற ஜோஜு, நிமிஷா ஷஜயன், அகில் விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது.

 

நகர வாழ்க்கை என்னவென்று தெரியாத கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவியும், அவரது காதலனும் யாருக்கும் தெரியாமல், ஒரு நாள் நகரத்திற்கு சென்று வர விரும்ப அவர்களின் பயணத்தில், அவர்கள் விரும்பாத ஒருவர் இணைந்துக் கொள்கிறார். இந்த பயணத்தால் பள்ளி மாணவியின் வாழ்க்கை என்ன ஆனது, என்பது தான் இப்படத்தின் கதை.

 

பஷில்.சிஜே இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அஜித் ஆச்சார்யா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சணல்குமார் சசிதரன் எடிட்டிங் செய்திருப்பதோடு ஒலி வடிவமைப்பும் செய்திருக்கிறார்.

 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “நான் குறும்படம் இயக்கி தான் திரைப்பட இயக்குநரானேன், எனக்கு கிடைத்த வாய்ப்பு போல, குறும்பட இயக்குநர்கள் மற்றும் இண்டிபெண்டெண்ட் இயக்குநர்களுக்கு கிடைக்க வேண்டும், என்பதால் தான் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஏற்கனவே குறும்படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்தோம். தற்போது டிஜிட்டல் படங்களை தியேட்டரில் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இதை குறும்படம் என்று சொல்ல முடியாது, விருது படங்கள் என்று சொல்லலாம். ஆனால், திரைப்படங்களுக்கு நிகராக, விறுவிறுப்பாக படம் நகரும். இந்த படத்தில் நடித்த ஜோஜுவின் நடிப்பை பார்த்து வியந்துவிட்டேன். உடனே தனுஷை வைத்து இயக்கும் படத்தில் அவரை முக்கியமான வேடத்திலும் நடிக்க வைத்துவிட்டேன். இயக்குநர் சணல்குமார் சசிதரன், திரைப்பட விருது விழாக்களில் பரிச்சயமாணவர். அவரது பல படங்கள் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்றுள்ளது. அவரின் இந்த ‘அல்லி’ நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். எளிமையான கதையாக இருந்தாலும், அதை சொல்லிய விதம் சுவாரஸ்யமாகவும், எதிர்ப்பார்ப்பு மிக்கதாகவும் இருக்கும். இப்படத்தின் ஒளிப்பதிவு மற்றும் சவுண்ட் பெருஷாக பேசப்படும்.” என்றார்.

 

Alli Press Meet

 

கார்த்திகேயன் சந்தானம், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் 100 நிமிட படமாகும். 

 

டிசம்பர் மாதம் வெளியாக உள்ள இப்படத்தை தொடர்ந்து மேலும் பல டிஜிட்டல் படங்களை தயாரித்து தியேட்டர்களில் வெளியிட இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், முன்னணி ஹீரோக்களை வைத்தும் இதுபோன்ற டிஜிட்டல் படங்களை தயாரிக்கவும், இயக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.