மீண்டும் ரீமேக் பக்கம் ஒதுங்கும் மோகன் ராஜா!

’ஹனுமன் ஜங்கஷன்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ராஜா. தமிழில் வெளியான ‘தென்காசிப்பட்டினம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தெலுங்கி வெற்றி பெற்ற ‘ஜெயம்’ படத்தை தமிழில் ‘ஜெயம்’ என்ற தலைப்பில் ரீமேக் செய்து தமிழ் சினிமாவில் இயக்குநராக மோகன் ராஜா அறிமுகமானார்.
ஜெயம் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ’எம்.குமரன் S/O மஹாலக்ஷ்மி’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தில்லாலங்கடி’ என்று தொடர்ந்து ரீமேக் படங்களை இயக்கி வந்ததால், மோகன் ராஜாவுக்கு ரீமேக் இயக்குநர் என்ற பட்டப்பெயரே உருவாகி விட்டது.
இதன் மூலம், அவர் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளாகட்டும், அவர் பேட்டி கொடுத்தாலும் சரி, ”எப்போது சார், சொந்த கதை எழுதி படம் இயக்கப் போகிறீர்கள்” என்று கேட்க தொடங்கிவிட்டார்கள். ஒரு கட்டத்தில் கடுப்பான இயக்குநர் மோகன் ராஜா, ’வேலாயுதம்’ படத்திற்கு பிறகு எந்த ஒரு படத்தையும் இயக்காமல், சொந்தமாக கதை எழுதுவதில் ஈடுபட்டவர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘தனி ஒருவன்’ என்ற படத்தின் மூலம் தனது சொந்த கதையை இயக்கி மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்தார். அப்படத்தின் வெற்றியால் அவர் மீது இருந்த ரீமேக் இமேஜ் மறைந்தது. பிறகு சிவகார்த்திகேயனை வைத்து ‘வேலைக்காரன்’ என்ற படத்தை இயக்கினார். இதுவும் அவரது சொந்த கதைதான். ஆனால், அப்படம் தோல்விப்படமாக அமைந்துவிட்டது. இதன் பிறகு வேறு எந்த பட வாய்ப்புகளும் மோகன் ராஜாவுக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், பட வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் ரீமேக் பக்கம் இயக்குநர் மோகன் ராஜா ஒதுங்கியுள்ளார். இந்தியில் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதோடு, தேசிய விருதுகளை வென்ற, ‘அந்தாதுன்’ திரைப்படத்தை மோகன் ராஜா தமிழில் இயக்கப் போகிறார்.
இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற நடிகர்கள் தனுஷ், சித்தார்த் ஆகியோரிடம் மிகப்பெரிய போட்டி நிலவி வந்த நிலையில், நடிகர் தியாகராஜன் ரீமேக் உரிமையை கைப்பற்றியிருப்பதோடு, தனது மகன் பிரஷாந்தை ஹீரோவாக வைத்து அப்படத்தை தயாரிக்க இருக்கிறார். மோகன் ராஜா இயக்கினால் நன்றாக இருக்கும் என்று தியாகராஜன் தான் மோகன் ராஜாவை அனுகினாராம்.
ரீமேக் படங்களே இயக்க கூடாது என்ற முடிவில் இயக்குநர் மோகன் ராஜா இருந்தாலும், ‘வேலைக்காரன்’ வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டு தொடங்கிய நிலையில், வேறு பட வாய்ப்புகள் கிடைக்காததால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்று ரீமேக் படத்தை இயக்க ஓகே சொல்லிவிட்டாராம்.