Jan 29, 2026 06:01 AM

அனைத்து தரப்பினருக்கும் ‘மரகதமலை’ படம் பிடிக்கும் - இயக்குநர் எஸ்.லதா நம்பிக்கை

அனைத்து தரப்பினருக்கும் ‘மரகதமலை’ படம் பிடிக்கும் - இயக்குநர் எஸ்.லதா நம்பிக்கை

தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இரண்டு அம்சங்களும் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது ‘மரகதமலை’. 

 

அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் செய்திருக்கிறார். 

 

இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்க, சிங்கம், புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.

 

படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், படத்தை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ள இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ்.லதா, பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பேசுகையில், “குழந்தைகளுக்கு கதை சொல்வதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. என் பேரக்குழந்தைகளுக்கு பல கதைகள் சொல்வேன். அந்த கதைகளை கேட்கும் என் குடும்பத்தார், கதைகள் நன்றாக இருக்கிறது, என்று என்னை பாராட்டுவார்கள். அப்படி தான் இந்த கதையையும் நான் எழுதிய போது, இதை ஏன் திரைப்படமாக எடுக்க கூடாது, என்று என் குடும்பத்தார் கூறி, என்னை இப்போது இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் உட்கார வைத்திருக்கிறார்கள்.

 

மரகதமலை படத்தின் கதையை 18 ஆம் நூற்றாண்டில் நடப்பது போல் எழுதியிருக்கிறேன். ஜமீனிடம் இருக்கும் புதையலை கொள்ளைக்கார கும்பல் கொள்ளையடிக்க முயற்சிக்கிறது. அவர்களிடத்தில் இருந்து புதையலை காப்பாற்றுவதற்கான ஜமீன் தன் குடும்பத்துடன் காட்டுக்குள் செல்கிறார். அப்போது அவரது மனைவி, பிள்ளை என்று அனைவரும் பிரிந்து விடுகிறார்கள். பிரிந்த குடும்பத்தினர் காட்டுக்குள் பயணிக்கும் போது பல சவால்களையும், விலங்குகளையும் எதிர்கொள்கிறார்கள். அவற்றில் இருந்து தப்பித்து ஜமீன் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா ?, ஜமீனின் புதையல் காப்பாற்றப்பட்டதா ? என்பதை தான் சாகசங்கள் நிறைந்த, மாயாஜால உலகத்தோடு சொல்லியிருக்கிறேன்.

 

தடா வனப்பகுதியில் சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். குதிரையை மட்டும் ஒரிஜினலாக பயன்படுத்தி விட்டு, மற்ற விலங்குகளை கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளோம். ஆனால், அது கிராபிக்ஸ் போல் தெரியாதவாறு காட்சிகள் தரமாக வந்திருக்கிறது. அதேபோல், படத்தில் டிராகனையும் உருவாக்கியிருக்கிறோம், தமிழ் சினிமாவில் டிராகனை இதுவரை யாரும் படத்தில் பயன்படுத்தியதில்லை, நாங்கள் தான் முதல் முறையாக செய்திருக்கிறோம். இது படத்தின் சிறப்பு அம்சமாக இருக்கும்.

 

Maragathamalai

 

தடா வனப்பகுதியில் கடந்த 15 வருடங்களாக படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், நாங்கள் சிறுவர்களுக்கான படம் எடுப்பதால் எங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அதே சமயம், இரவு நேரங்களில் அப்பகுதியில் புலிகள் வருவதோடு, பல விஷ பாம்புகளும் வரும் என்று எச்சரித்தார்கள். சிறுவர்களை வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்தியதால் மிகுந்த எச்சரிக்கையுடன், பாதுகாப்பு அம்சங்களோடு படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.

 

படத்தில் நான்கு பாடல்கள் உள்ளது. ஒரு விநாயகர் பாடலை நான் எழுதியிருக்கிறேன், மிக சிறப்பாக வந்திருக்கிறது. பாடகி சின்மயி இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார். பாடல்கள் நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும். ஒளிப்பதிவாளர் முத்தையாவின் பணி நிச்சயம் பேசப்படும். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் என அனைவரும் பிரபலமானவர்கள். மேலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக நாங்கள் எதிர்பார்த்த பட்ஜெட்டை படம் தாண்டியது. எனவே படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. 

 

முதலில் என் கதையை படமாக தயாரிக்க வேண்டும் என்று தான் விரும்பினேன். அதற்காக சில இயக்குநர்களிடம் என் கதையை சொன்ன போது, அவர்கள் பல மாற்றங்கள் செய்ய தொடங்கி விட்டார்கள், ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை. என் கதை நான் எழுதியது போலவே எந்தவித மாற்றமும் இன்றி திரைப்படமாக வேண்டும் என்பது தான் என் விருப்பம். எனவே, மற்றவர்களிடம் கொடுத்து இயக்க சொல்வதை விட நாமே இயக்கி விடலாம் என்று முடிவு செய்து விட்டேன், அப்படி தான் நான் இயக்குநர் ஆனேன். இந்த படத்திற்குப் பிறகு அடுத்த படத்திற்கான கதையையும் எழுதி, அதை பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

 

சிறுவர்களுக்கான படமாக மட்டும் இன்றி, பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் அனைத்து அம்சங்கள் நிறைந்த சிறப்பான பொழுதுபோக்கு படமாக மரகதமலை இருக்கும். படத்தை முடித்து தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்டோம். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம். படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாவதோடு, படம் பற்றிய மேலும் பல சுவாரஸ்ய தகவல்களை அடுத்தடுத்த சந்திப்புகளில் தெரிவிப்போம்.” என்றார்.

 

 

எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, பி.சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். பா.விஜய், கே.டி.சேஷா பாடல்கல் எழுதியுள்ளனர். கே.தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தயாரிப்பு ஏற்பாட்டாளராக மல்லிகர்ஜுன ராவ் பணியாற்ற, மக்கள் தொடர்பாளராக நா.விஜய் பணியாற்றுகிறார்.