’மாயபிம்பம்’ திரைப்பட விமர்சனம்
Casting : Janaki, Aakash, Hari Rudran, Rajesh, Arun Kumar
Directed By : K. J. Surendar
Music By : Nandha
Produced By : Selfstart Productions - K. J. Surendar
மருத்துவக் கல்லூரி மாணவரான ஆகாஷ், பேருந்து பயணத்தின் போது தற்செயலாக சந்திக்கும் நாயகி ஜானகியால் ஈர்க்கப்படுகிறார். அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது அது விபத்தில் முடிகிறது. ஆனால், அந்த விபத்தே இருவரையும் மீண்டும் சந்திக்க வைப்பதோடு, பழகுவதற்கான சூழலை உருவாக்கி கொடுக்கிறது. அந்த சூழ்நிலை மற்றும் அதில் நடக்கும் சம்பவங்களின் உண்மை பிம்பத்தை பார்க்காமல், மாயபிம்பத்தை பார்க்கும் ஆகாஷின் ஒரு செயல், அவரது வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே படத்தின் கதை.
சுமதி என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஜானகி, பக்கத்து வீட்டு பெண் போல் மிக எளிமையாக இருந்தாலும், பார்வையாளர்களை சட்டென்று கவர்ந்து விடுகிறார். அறிமுக படத்தில் மிக அழுத்தமான கதாபாத்திரத்தை அசால்டாக நடித்து பாராட்டு பெறும் ஜானகி, நாயகனின் செயலை கண்டு அதிர்ச்சியடையும் அந்த ஒரு காட்சியிலேயே தன் மனதில் இருக்கும் காதலையும், ஏமாற்றத்தையும் கண்கள் மூலம் மிக அழுத்தமாக பதிவு செய்து கைதட்டல் பெற்று விடுகிறார்.
நாயகனாக நடித்திருக்கும் ஆகாஷ், தனது இயல்பான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார். காமத்தின் மீது இருந்த ஆர்வத்தினால் தன் மனதில் இருக்கும் காதலை அறியாமல் போனதை நினைத்து வருந்தும் காட்சிகளிலும், தன் காதலுக்கு தானே எதிரியானதை நினைத்து வருந்தும் காட்சிகளிலும் முதிர்ச்சியான நடிப்பின் மூலம் முத்திரை பதித்திருக்கிறார்.
நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் புதுமுகங்கள் என்றாலும், எந்தவித பதற்றமும் இன்றி படம் முழுவதும் இயல்பாக நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
நாயகின் பெற்றோர்களாக நடித்த நடிகர், நடிகை மற்றும் அண்ணன், அண்ணியாக நடித்தவர்கள் என பெரும்பாலானவர்கள் அதிகம் பரிச்சயம் இல்லாத முகங்களாக இருந்தாலும், தங்கள் நடிப்பின் மூலம் தங்களது கதாபாத்திரங்களை பார்வையாளர்கள் மனதில் எளிதில் பதிய வைத்து விடுகிறார்கள்.
எட்வின் சகாயின் ஒளிப்பதிவு கடலூர் மற்றும் சிதம்பரம் பேருந்து நிலையங்களையும் ஒரு கதாபாத்திரமாக பயணிக்க வைத்திருக்கிறது. ஒளிப்பதிவில் ஆடம்பரம் இல்லை என்றாலும், பார்வையாளர்களுக்கு கதைக்களத்தில் பயணித்த உணர்வை கொடுக்கிறது.
நந்தாவின் இசையில் பாடல்கள் கதை மாந்தர்களின் உணர்வுகளை சொல்லும் விதமாகவும், கேட்கும்படியும் அமைந்திருக்கிறது. திரைக்கதையோடு பயணிக்கும் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம்.
காதல் கதையாக இருந்தாலும், அதை புதிய கண்ணோட்டத்தில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநருக்கு பெரும் துணையாக பயணித்திருக்கும் படத்தொகுப்பாளர் வினோத் சிவகுமாரின் பணியும் பாராட்டுக்குரியது.
எழுதி இயக்கியிருக்கும் கே.ஜெ.சுரேந்தர், காதல் கதையை அழகியல் நிறைந்த கவிதையாக மட்டும் இன்றி கனத்த இதயங்களோடு அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
காதல் என்ற ஒரு வார்த்தை தான் கதைக்கரு என்றாலும், அதை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் இயக்குநர் கே.ஜெ.சுரேந்தரின், திரைக்கதை மற்றும் கிளைமாக்ஸ், ஏற்கனவே வெளியான ஒரு படத்தின் பாதிப்பாக தெரிந்தாலும், அப்படம் போலவே பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்.
காதலுக்கு பல வகையில் எதிரிகளும், எதிர்ப்புகளும் வருவதுண்டு, ஆனால் முதல் முறையாக காதலே ஒரு காதலுக்கு எப்படி எதிரி ஆகிறது, என்பதை திரை மொழி திருப்பங்கள் மூலம் மிக சுவாரஸ்யமாக சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர்.
மொத்தத்தில், ‘மாயபிம்பம்’ நிஜ காதல்.
ரேட்டிங் 3.2/5

