Mar 06, 2026 05:58 AM

’வடம்’ திரைப்பட விமர்சனம்

e92451b0f53add3a10b19d53af40a6e3.jpg

Casting : Vimal, Natraj, Sanashka Sri, Munishkanth, Naren, Indhumathi, Balasaravanan, Madhusoothan Rao, Deepa Shankar

Directed By : Kenthiran.V

Music By : D.Imman

Produced By : Masani Pictures - Rajasekar.R

 

ஊர் பெரிய மனிதரான நரேன், அடிமாட்டுக்கு போகும் மாடுகளை காப்பாற்றி அவற்றை தனது சொந்த கோசாலையில் வைத்து பராமரிக்கிறார்.  அவரது மகனான விமலும், அப்பாவை போல் மாடுகள் மீது பாசம் கொண்டவராக இருக்கிறார்.  அப்படி அடிமாட்டுக்கு அனுப்பப்பட்ட  உடல் குறைபாடுள்ள கன்று குட்டியை, கோசாலையில் விடாமல் தனது வீட்டில் வைத்து பராமரிக்கும் விமல், அதற்கு பயிற்சியளித்து மஞ்சுவிரட்டு போட்டிக்கான காளையாக தயார்ப்படுத்தி, பல வருடங்களாக யாராலும் அடக்க முடியாத காளை என்ற பெருமையோடு வலம் வருகிறார்.

 

இதற்கிடையே, விமலின் காளை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, விமலும் கொலை வழக்கு ஒன்றில் ஜாமீன் பெறுகிறார். அப்போது அவரை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிக்கிறது. மறுபக்கம், விமலின் வீட்டில் பணியாற்றிய ஒருவர் அவரை கொலை செய்ய திட்டம் போடுகிறார். இப்படி பலரிடம் பகைமை வளர்த்திருக்கும் காரணத்தால் தன் மகிழ்ச்சியான வாழ்க்கையை மறந்து சோகமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் விமல், இழந்த மகிழ்ச்சியை நாயகி சனஷ்கா ஸ்ரீ-யின் காதல் திரும்ப கொடுக்கிறது. 

 

காதலால் உள்ளத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி, மீண்டும் மஞ்சுவிரட்டு களத்தில் இறங்க தயாராகும் தன் காளையின் உடல்நிலை முன்னேற்றத்தால் மனதில் ஏற்பட்ட நம்பிக்கை, ஆகியவற்றின் மூலம் தனது வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு பயணிக்க முடிவு செய்யும் விமலுக்கு, அவரது காதலி சனஷ்கா ஸ்ரீ பேரதிர்ச்சி கொடுக்கிறார். அது என்ன ?, அந்த அதிர்ச்சியில் இருந்தும், தனக்கு எதிரான பகைமையில் இருந்தும் விமல் மீண்டாரா ?, அவரது காளை மீண்டும் மஞ்சுவிரட்டு களத்தில் சாதித்ததா ?, என்பதை கமர்ஷியலாக சொல்வது தான் ‘வடம்’.

 

ஜல்லிக்கட்டு போட்டிகளை மையமாக கொண்டும், அதனை பின்னணியாக கொண்டும் பல தமிழ்ப் படங்கள் வந்திருக்கிறது. ஆனால், முதல் முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. ஆனால், மஞ்சுவிரட்டு போட்டியை பற்றி விரிவாக படத்தில் சொல்லவில்லை என்றாலும், அதைச் சார்ந்திருக்கும் மனிதர்களின் பெருமை மற்றும் பகைமையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் கேந்திரன்.வி.

 

வெற்றிவேல் என்ற கதாபாத்திரத்தில் மாடுகள் மீது பாசம் கொண்டவராகவும், காளை மாடுகளை மஞ்சுவிரட்டு போட்டிக்கு தயார்ப்படுத்துபவராகவும் நடித்திருக்கும் விமல், வழக்கம் போல் அலுங்காமல் குலுங்காமல் நடித்திருக்கிறார். பொதுவாக ஹீரோக்கள் காளைகளை அடக்கும் வீரர்களாக நடித்து மாஸ் காட்டுவது தான் வழக்கம். ஆனால், விமல் யாருக்கும் அடங்காத காளையின் உரிமையாளராக நடித்து கெத்து காட்டியிருக்கிறார். 

 

நாயகியாக நடித்திருக்கும் சனஷ்கா ஸ்ரீ, பார்த்ததும் பிடித்துப் போகும் அழகோடு வலம் வருகிறார். அழகில் ஆபத்தும் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் மிரட்டல். இருந்தாலும், அந்த மிரட்டலை அந்த ஒரு காட்சியோடு நிறுத்திவிடுவதும், அவருக்கான காட்சிகள் அதிகம் இல்லாததும் பார்வையாளர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. 

 

காளைகள் மற்றும் மஞ்சுவிரட்டு போட்டியை கெளரவமாகவும், பெருமையாகவும் கருதும் நட்டி நட்ராஜ், வெற்றி மட்டுமே வாழ்க்கை, தனக்கு போட்டியாளர்களே இருக்க கூடாது, என்ற மனநிலையில் வாழும் மனிதர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

 

காமெடி நடிகராக காட்சியளித்து வந்த முனீஷ்காந்த், பல படங்களில் சில குணச்சித்திர வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்தாலும், இதில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது இயல்பான மற்றும் சிறப்பான நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி, திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. இந்த படத்திற்காக முனீஷ்காந்துக்கு சிறந்த குணச்சித்திர நடிகர் விருது கிடைப்பது உறுதி.

 

விமலின் தந்தையாக நடித்திருக்கும் நரேன், கொஞ்சம் பெரிய மீசை வைத்து விட்டால், நடிப்பிலும் அதை வெளிப்படுத்த கொஞ்சம் ஓவராக நடித்து விடுவார். இந்த படத்திலும் அவருக்கு கொஞ்சம் பெரியதாக மீசை வைக்கப்பட்டிருப்பதால் மனுஷன் நடித்து தள்ளியிருக்கிறார்.

 

விமலின் அம்மாவாக நடித்திருக்கும் இந்துமதி, அத்தையாக நடித்திருக்கும் தீபா சங்கர், உறவினராக நடித்திருக்கும் பால சரவணன், பகையாளியாக நடித்திருக்கும் மதுசூதனன் ராவ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் தென் மாவட்ட மக்களை தங்களது நடிப்பில் நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார், மஞ்சுவிரட்டு போட்டி களத்தையும், போட்டியையும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார். படத்தில் காட்டப்படும் லொக்கேஷன்கள் பல படங்களில் பல முறை பார்த்திருப்பவை என்பதால் ஒளிப்பதிவில் தனித்துவம் இல்லை. அதே சமயம், ஹீரோ, ஹிரோயினை அழகாகவும், பளிச்சென்றும் காட்சிப்படுத்தியிருப்பவர், படத்திற்காக செய்யப்பட்ட செலவுகளை தன் கேமரா மூலம் திரையில் வெளிக்காட்டியிருக்கிறார்.

 

தனது பழைய பாடல்களின் சாயல் இருந்தாலும், திரும்ப திரும்ப கேட்க வைக்கும் பாடல்களை கொடுத்து படத்திற்கு பலம் சேர்க்கும் வல்லமை படைத்த டி.இமான், இந்த படத்தில் அத்தகைய வித்தையை செய்ய தவறியிருக்கிறார். பின்னணி இசை அளவு.

 

மஞ்சுவிரட்டு போட்டியை மையப்படுத்திய கதை என்றாலும், அதில் தென்மாவட்ட மக்களின் பெருமை மற்றும் பகைமை சார்ந்த விசயங்கள் தூக்கலாக இருப்பது, ஏற்கனவே வெளியான பல படங்களை நினைவுப்படுத்தி விடும் என்பதால், சாபு ஜோசப்.வி.ஜெ, தன் படத்தொகுப்பின் மூலம் புதிய கண்ணோட்டத்தில் கதை சொல்லி, அதன் மூலம் படத்தை பல திருப்பங்களோடு நகர்த்தி சென்றிருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் கேந்திரன்.வி, தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னனியாக கொண்டு எழுதியிருக்கும் திரைக்கதையில் கமர்ஷியல் அம்சங்கள் அனைத்தும் நிறைந்திருக்கிறது. இருந்தாலும், மஞ்சுவிரட்டு போட்டியின் விதிமுறைகள் உள்ளிட்ட பலவற்றை விரிவாக பேசவில்லை. அதற்கான நேரமும் இல்லை என்பதால், நாயகனை சுற்றி நடக்கும் பகைமை நாடகத்தை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

 

இயக்குநர் கேந்திரன்.வி-ன் முந்தைய படங்களோடு இந்த படத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது இயக்குநராக அவர் பல படிகள் முன்னேறியிருப்பது தெரிந்தாலும், திரைக்கதையில் எந்தவித புதிய யுக்தியையும் கையாளாமல், ஏற்கனவே பார்த்த தமிழ் படம் ஒன்றை நினைவுப்படுத்தியிருக்கிறார். இருந்தாலும், தான் சொல்ல வந்ததை அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாக கொடுத்ததில் இயக்குநர் கேந்திரன்.வி, வெற்றி பெற்றிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘வடம்’ விமலுக்கு வெற்றி படமாக அமையும்.

 

ரேட்டிங் 3.2/5